நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை; சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, இதேபோன்ற வழக்கில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும் இதே உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் இளங்கலை மாணவர்களுக்கான நீட்தேர்வு கடந்த மே 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதனிடையே, ஆவடியில் தேர்வு மையத்தில் பிற்பகல் 3 மணி முதல் 4.15 மணிவரை மின்தடை ஏற்பட்டதால் மாணவர்களால் சரிவர தேர்வு எழுத முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மறு தேர்வு நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட 13 மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், நீட் மறுதேர்வு கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மோசமான வானிலை காரணமாக இந்தூரில் பல இடங்களில் செயல்பட்ட நீட் தேர்வு மையங்களில் மின் தடை ஏற்பட்டது. எனவே, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே, மறு தேர்வு கோரி மத்திய பிரதேசத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அடுத்த விசாரணை வரும் வரையில், நீட் தேர்வு முடிவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். அதோடு, மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய பிரதேச மேற்கு மண்டல மின்விநியோக நிறுவனமும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு விசாரணை ஜூன் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால், ஜூன் 14ம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியாவது சிக்கல் ஏற்பட்டுள்ளது.


