தொடர்கிறது: தூரெடுக்காத சாக்கடையால் ரோட்டில் ஓடும் கழிவு: சிவகங்கையில் சுகாதாரக்கேடு அவலம்

சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 18 ஆயிரத்து 131 குடியிருப்புகள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

நகராட்சியில் 2006=-2007ம் ஆண்டு ரூ.19 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. 3 கட்டமாக இந்த திட்டம் நடந்து முடிந்துள்ளது. முறையாக பாதாள சாக்கடை பணி நடக்காததால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி ரோட்டில் ஓடுகிறது.

குறிப்பாக பெருமாள் கோவில் அருகில், அகிலாண்டா புரம், சாஸ்திரி தெரு உள்ளிட்ட பகுதியில் அடிக்கடி இந்த பிரச்னை உள்ளது. மேலும் காந்திவீதி, தெற்குராஜா வீதி, மஜித்ரோடு, போஸ் ரோடு, பஸ் ஸ்டாண்ட் பின்பகுதி, அரண்மனை வாசல் பகுதி, வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள கடைவீதிகளில் முறையாக சாக்கடை கால்வாய் இல்லாததோடு, இருக்கும் இடங்களிலும் துார் வாராததால் சாக்கடை நிரம்பி ரோட்டிற்கு வந்து விடுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு காந்திவீதி, தெற்கு ராஜ வீதியில் நகராட்சி நிர்வாகத்தினரால் கால்வாய் துர்வாரப்பட்டது. துார்வாரிய பின்பு கால்வாயை முறையாக கட்டாமல் விட்டுவிட்டனர், அந்தந்த கடை உரிமையாளர்களே அவரவர் கடை முன்பு சாக்கடையை சீரமைத்து கொண்டனர். சில இடங்களில் கால்வாய் உயரமாகவும், சில இடங்களில் பள்ளமாகவும் இருப்பதால் கழிவு நீர் முறையாக செல்வதில்லை. கடந்த வியாழக்கிழமை நகரில் பெய்த மழையில் ரோட்டில் தண்ணீர் தேங்கியது. பஸ் ஸ்டாண்ட், அரண்மனை, காந்திவீதியில் மக்கள் நடந்து கூட செல்ல முடிய வில்லை. மழைநீருடன் கழிவு நீர் ரோட்டில் ஓடியதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதாள சாக்கடை பல இடங்களில் நிரம்பி ரோட்டில் செல்வதால் அந்த பகுதியில் உள்ள அடைப்புகளையும் சீரமைக்க வேண்டும்.

தெப்பக்குளத்தில் மிதக்கும் குப்பை



நகரின் மைப்பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தெப்பகுளத்திற்கு மழைநீர் செல்ல வரத்து கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் சில இடங்களில் அடைபட்டுள்ளது.தெப்பக்குளத்திற்கு வரும் வரத்து கால்வாயில் சிலர் கோழி கழிவு, குப்பகைளை கொட்டுகின்றனர்.

மழை பெய்தால் கழிவுநீருடன் மழைநீர் குளத்திற்கு வருவதால் குளம் முழுவதும் குப்பை சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் முறையாக சாக்கடை கால்வாய் கட்டி கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்வாய் உள்ள பகுதியில் குப்பை தேங்கா வண்ணம் வாரந் தோறும் கழிவுகளை அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement