பாகிஸ்தானால் மனித குலத்துக்கு அச்சுறுத்தல்: அசாதுதீன் ஓவைசி

ஹைதராபாத் : “பயங்கரவாதிகளுக்கு ஆயுதம், பயிற்சி மற்றும் நிதியுதவி அளிப்பதன் வாயிலாக, மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக பாகிஸ்தான் மாறியுள்ளது,” என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.
ஹைதராபாத் எம்.பி.,யும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி நேற்று அளித்த பேட்டி: பாக்., ஆதரித்த பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா தான்.
அந்நாட்டின் பயங்கரவாதத்தால் நம் குடிமக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் தில்லாலங்கடி வேலைகளை அம்பலப்படுத்த வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து கட்சி குழுவினர், நம் நாடு பாதிக்கப்பட்டது குறித்து உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும். அந்த குழுவில் நான் இடம்பெறுவேனா என்பது தெரியாது.
நம் நாட்டை நிலையற்ற தன்மைக்கு ஆளாக்குவது, வகுப்புவாத பிளவை துாண்டுவது, பொருளாதார வளர்ச்சியை தடுப்பது ஆகியவை, பாகிஸ்தானின் எழுதப்படாத சித்தாந்தத்தின் ஒரு பகுதி. இதுதான், பாக்., அரசின் ஒரே நோக்கம்.
பஹல்காம் தாக்குதலால் நாம் பொறுமையை இழந்து விட்டோம். பாகிஸ்தானுக்கு பலத்த அடியை கொடுத்து விட்டோம். இனி, அந்நாடு நம்மிடம் வாலாட்ட முடியாது. பயங்கரவாதிகளுக்கு ஆயுதம், பயிற்சி மற்றும் நிதியுதவி அளிப்பதன் வாயிலாக, மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக பாகிஸ்தான் மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.