மேடவாக்கம் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

மேடவாக்கம்,:பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேடவாக்கம். இப்பகுதியின் சுடுகாடு, 5 ஏக்கர் பரப்பளவில், பரங்கிமலை - மேடவாக்கம் சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது.

இந்நிலையில், இதன் சுற்றுச்சுவர் சாலையின் மட்டத்திலிருந்து, ஒன்றரை அடி உயரம் மட்டுமே உள்ளதால், மர்ம நபர்கள் குப்பை, இறைச்சி கழிவை வீசி செல்வதோடு, தீ வைத்தும் எரிக்கின்றனர்.

இதனால் எழும் புகை மூட்டத்தில் சிக்கி, அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.

சிலர், சுடுகாட்டின் உள்ளே மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் உடைத்து போடும் மது பாட்டில்களால், உடலை புதைக்க வரும் அப்பகுதிவாசிகள் காயம்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

மேடவாக்கம் சுடுகாட்டின் சுற்றுச்சுவர், கடந்த 2012ம் ஆண்டு, சி.எம்.டி.ஏ., நிதியில், அப்போதைய சாலை மட்டத்திற்கேற்ப அமைக்கப்பட்டது.

தற்போது, சுற்றுச்சுவரை மேம்படுத்த போதிய நிதியில்லை. எனவே, அரசு ஏதேனும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கினால், சுற்றுச்சுவரை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement