மூணாறு சுற்றுலாப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் பல மணிநேரம் பயணிகள் பரிதவிப்பு

மூணாறு:கேரள மாநிலம் மூணாறில் சுற்றுலாப்பகுதிகளில் நேற்று பல மணி நேரம் நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் தவித்தனர்.
மூணாறில் கோடை சுற்றுலா சீசன் துவங்கிய நாள் முதல் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகிறது.
மே 1க்கு பிறகு தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நகர் உட்பட சுற்றுலா பகுதிகள் அனைத்தும் நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்து வருகின்றன.
குறிப்பாக மூணாறு வட்டவடை ரோட்டில் வனத்துறை பூந்தோட்டம், கொரண்டிக்காடு போட்டோ பாய்ன்ட், அருகில் உள்ள தனியார் யானை சவாரி மையத்திற்கு செல்லும் நுழைவு பகுதி, மாட்டுபட்டி அணை, படகு சவாரிக்கு செல்லும் நுழைவு பகுதி, எக்கோ பாய்ன்ட், குண்டளை அணை, டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகிறது. அதனை கட்டுப்படுத்த இயலாமல் போலீசார் திணறுகின்றனர்.
கொரண்டிக்காடு முதல் மாட்டுபட்டி அணை வரை நேற்று போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு ஐந்து கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதில் சிக்கி பல மணி நேரம் தவித்த சுற்றுலா பயணிகளில் சிலர் பயணத்தை தவிர்த்து விட்டு திரும்பி சென்றனர்.
இதே நிலை ஒவ்வொரு சீசன் நேரங்களிலும் நிலவி வரும் நிலையிலும் நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால் ஊட்டி, கொடைக்கானல் போன்று மூணாறு வர இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.