பீட்டா மீன்கள் துள்ளாத மனமும் துள்ளும்!

''வால் துடுப்பின் வடிவம், நிறத்திற்கு ஏற்ப 70க்கும் மேற்பட்ட பீட்டா இன மீன்கள் இருக்கின்றன. இவை தண்ணீரில் நீந்தும் அழகை பார்த்தாலே, மனம் துள்ளலாடும்,'' என்கிறார் மீன் பண்ணையாளர் கார்த்திக்.

கோவையில், விவசாயி பார்வை அக்வாடிக்ஸ் என்ற பெயரில், நண்பர்களுடன் இணைந்து, மீன் பண்ணை நடத்தி வரும் இவர், மீன் தொட்டி பராமரிப்பு பற்றி, நம்மிடம் பகிர்ந்தவை:

வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கும் மீன்கள், ஒவ்வொன்றும் வெவ்வேறு குணாதிசயத்தை கொண்டிருக்கும். இதில், பலரும் விரும்பி வளர்க்கும் பீட்டா இன மீன்களில், அதன் வால் துடுப்பின் வடிவம் நிறத்திற்கு ஏற்ப, 70 க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன.

யானை காது போன்ற, காது அமைப்பு கொண்ட பீட்டா மீனுக்கு 'டம்போ இயர்'; அரை நிலா வடிவில் துடுப்பு இருந்தால், 'ஹாப் மூன்'; கீரிடம் போன்ற துடுப்பிற்கு 'கிரவுன் டெய்ல்'; பறவையின் இறகு போல இருக்கும் துடுப்பு கொண்ட பீட்டா மீனை 'பெதர் டெய்ல்' என்பர். இப்படி, துடுப்பின் வடிவம் மாறி கொண்டே இருப்பதால், அவை நீந்தும் போது காட்சிக்கு அழகாக இருக்கும். இதை பார்த்தாலே, நம் மனம் துள்ளலாடும்.

பீட்டா மீன்களை எளிதில் பராமரிக்கலாம் என்பதால், புதிதாக மீன் வளர்ப்போர், இதை வாங்கலாம். சில இனங்கள் விலை குறைவாகவும் கிடைக்கும். பீட்டா மீன் வளர்க்கும் தொட்டியில், மோட்டார் பொருத்த தேவையில்லை. தண்ணீரின் மேல் மட்டத்தில் நீந்தி, தேவையான ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கொள்ளும்.

 அதிகபட்சம் 7 செ.மீ., வரை வளரும் ஒரு பீட்டா மீனை, 1x1 அளவுள்ள தொட்டியில் விட்டால், ஜாலியாக நீந்தி கொண்டு இருக்கும்

 பீட்டா வெரைட்டியில், ஆண் மீன்களை பொறுத்தவரை தனிகாட்டு ராஜா தான். மற்ற மீன்களுடன் சேர்ந்து நீந்தாது. பெண் இன மீன்களை நியான் டெட்ரா, ப்ளூ கவ்ராமி, பிக்டஸ் கேட் பிஸ் போன்ற, குறிப்பிட்ட சில வெரைட்டி மீன்களுடன் சேர்த்து நீந்த விடலாம். அவை சண்டையிட்டு கொள்ளாது

 இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை உயிர் வாழும் பீட்டா இன மீன்களின் தொட்டியை, முறையாக சுத்தப்படுத்தாவிடில், அவை இறக்கும் அபாயம் ஏற்படும். தொட்டியில் தண்ணீர் மாற்றும் போது, ஏற்கனவே இருந்த பழைய தண்ணீர் 30 சதவீதம், புதிய தண்ணீர் 70 சதவீதம் இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம்

 பீட்டா இன மீன்களுக்கென பிரத்யேக உணவு கடைகளில் கிடைக்கிறது. இதை அளவுக்கு அதிகமாக கொடுத்தாலும் ஆபத்து தான். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமிருப்பதால், இதை முறையாக பராமரித்தால், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதை காணலாம்

மீன் வளர்ப்பில் ஈடுபட்ட சில ஆண்டுகளிலே, அதன் ஒவ்வொரு அசைவையும் உங்களால் உணர முடியும். நீங்கள் அருகில் வந்தால், அவை மகிழ்ச்சியாக நீந்துவதை காண முடியும், என்றார்.

Advertisement