ஹீட் ஸ்ட்ரோக் அபாயம்

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், உங்களின் செல்லப்பிராணிகளுக்கு ஹீட் ஸ்ட்ரோக் வராமல் பாதுகாப்பது எப்படி என, டிப்ஸ்களை தருகின்றனர் கால்நடை மருத்துவர்கள்.

மதிய நேர உணவு கூடாது



பறவைகளின் சராசரி உடல் வெப்பநிலை, 101-109 டிகிரி பாரஹீட். இதை தாண்டினால், அது ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறி என உறுதி செய்து கொள்ளலாம். அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டே இருப்பது, வாயை திறந்து மூச்சு விடுவது, இறக்கையை உடலில் இருந்து வெளியே தள்ளி வைப்பது போன்ற அறிகுறிகள் வாயிலாகவும், அவை ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டிருப்பதை அறியலாம். இது வராமல் தடுக்க, நிழலான, காற்றோட்டமுள்ள பகுதியில், பறவையின் கூண்டு வைத்திருப்பது அவசியம். சுத்தமான தண்ணீர் அடிக்கடி குடிக்க வைப்பது, பறவையின் இறக்கை அடியில், தண்ணீரை அவ்வப்போது 'ஸ்பிரே' பண்ணலாம். ஈரப்பதமுள்ள உணவுகளை சாப்பிட வைக்க வேண்டும். மதிய நேரத்தில், உணவு சாப்பிட கொடுக்க கூடாது. உடல் வெப்பநிலையை குறைக்க, பறவையின் காலில் குளிர்ந்த நீரை அடிக்கடி தெளிக்கலாம். அதீத உடல் வெப்பநிலையால், பறவைக்கு வலிப்பு ஏற்படலாம் என்பதால், அலட்சியமாக இருக்க கூடாது. கால்நடை மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை பெற வழிவகை செய்ய வேண்டும்.

- ஈ. பிரதீப், கால்நடை மருத்துவர், திருப்பூர்

'ஐஸ் பேக்'கால் ஆபத்து



பப்பியை பொறுத்தவரை, 101-102.5 டிகிரி பரான்ஹீட் தான், அதன் சராசரி உடல் வெப்பநிலை. 103 டிகிரியை தாண்டினாலே காய்ச்சல்; 105 டிகிரிக்கு மேல் இருந்தால், அது ஹீட் ஸ்ட்ரோக். இச்சமயத்தில் மூச்சிரைத்தல், கண்கள் சிவப்பாக காணப்படுதல், சோர்வுடன் இருப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும். பப்பியை உடனே பேன் அடியில் அல்லது ஏசி இருக்கும் அறையில் வைப்பது அவசியம். அதிக உடல் சூடு இருக்கும் சமயத்தில், சிலர் நேரடியாக தலையில் 'ஐஸ் பேக்' வைப்பர். ஈரமான துணி கொண்டு மூடிவிடுவர். அதிக உடல் வெப்பநிலை இருக்கும் போது இவ்வாறு செய்தால், வெப்பத்தை வெளியேற்ற முடியாததோடு, ரத்த ஓட்டம் தடைப்பட்டு பப்பி இறக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, குளிர்ந்த தண்ணீரில், பப்பியின் பாதங்களை துடைத்து விடுவது, தண்ணீர் குடிக்க கொடுப்பது போன்ற முதலுதவிகளை மட்டும் செய்து, உடனே கால்நடை மருத்துவரை அணுகுவது அவசியம்.

- கே. தீபன்ஷி, கால்நடை மருத்துவர், சென்னை.

வலிப்பு ஏற்படலாம்



தட்பவெப்ப மாற்றங்களால், நாட்டு இன பூனைகள் அதிக பாதிப்பை சந்திக்காது. ஆனால், வெளிநாட்டு இன பூனைகளால், அதீத வெப்பத்தை தாங்க முடியாது. பூனையின் உடல்வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டினால், அது ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறி. இச்சமயத்தில், பூனையின் கண்கள் அடிக்கடி சிமிட்டாமல், மயங்கிய நிலையில் இருப்பது போன்று இருக்கும். மூச்சிரைப்பு, வாந்தி எடுப்பது, சோர்வுடன் காணப்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே கால்நடை மருத்துவரை அணுகுவது அவசியம். பொதுவாக பூனைகள் அதிக தண்ணீர் குடிக்காது என்பதால், வெயில் காலத்தில், அடிக்கடி தண்ணீர் குடிக்க செய்வது, ஈரப்பதமுள்ள உணவுகளை கொடுப்பது, நிழலான இடத்தில் தங்க வைப்பது அவசியம். உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது, ஈரமான துணி கொண்டு வயிற்றின் அடிப்பகுதி கால் பகுதியை துடைத்து விடலாம். இதில் அலட்சியம் காட்டினால், நினைவு இழப்பு, வலிப்பு ஏற்படுவதோடு, பூனை உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம் என்பதால், பராமரிப்பு விஷயங்களில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.

- பி.பி.ஜிஸ்னா ஜமால், கால்நடை மருத்துவர், கோவை.

Advertisement