கர்நாடகாவிலிருந்து கொண்டு வந்த 58 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

ஓசூர்: கர்நாடகாவிலிருந்து உரிமமின்றி, தமிழகத்திற்கு கொண்டு வந்த, 58 சமையல் காஸ் சிலிண்டர்களை, மத்திகிரி போலீசார் பறிமுதல் செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., கார்த்திகேயன் மற்றும் போலீசார், தமிழக எல்லையிலுள்ள கொத்த கொண்டப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர்.அவ்வழியாக வந்த ஆம்னி வேன் மற்றும் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிமமின்றி, கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் நோக்கில், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், சமையல் காஸ் சிலிண்டர்களை வாகனங்களில் கொண்டு செல்வது தெரிந்தது. இதையடுத்து, ஆம்னி வேனிலிருந்து, 20, மற்றும் சரக்கு வாகனத்திலிருந்து, 38 சமையல் காஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆம்னி வேன் டிரைவரான கிருஷ்ணகிரி கம்மம்பள்ளி சமத்துவபுரத்தை சேர்ந்த சந்தோஷ், 31, சரக்கு வாகன டிரைவரான, கிருஷ்ணகிரி கணபதி நகரை சேர்ந்த பிரசாந்த், 30, ஆகியோர் மீது
வழக்குப்பதிந்து விசாரித்து
வருகின்றனர்.

Advertisement