தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதினத்தில் தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் குருமகா சன்னிதானம், குரு முகூர்த்தங்கள் மற்றும் கோவில்களுக்கு எழுந்தருளி வழிபாடு செய்யும் பாரம்பரிய நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதின மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் வைகாசி பெருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தருமபுரம் ஆதின குரு முதல்வர் குரு ஞானசம்பந்தரின் குருவான கயிலை ஞானபிரகாசரின் குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மடத்தில் சித்தியடைந்த முந்தைய ஆதினங்கள் 15 பேரின் (சமாதி அடைந்த இடத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு கோயில்கள் உருவாக்கப்பட்ட இடமான) குரு முகூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பாரம்பரியமான முறைப்படி கட்டளை தம்பிரான்கள் புடைசூழ, பல்லாக்கிற்கு முன்னே யானை குதிரை செல்ல மங்கள வாத்திய இசை முழங்க அடியவர் கூட்டம் பின் செல்ல தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் தருமபுர ஆதினம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் எழுந்தருளி வழிபாடு நடத்தினார்.
ஒவ்வொரு முகூர்த்தத்திலும் அந்தந்த குருமகா சன்னிதானங்களில் வாழ்க்கை வரலாறு விளக்கிக் கூறப்பட்டது. தொடர்ந்து ஞானபுரீஸ்வரர் கோவில் , துர்க்கை அம்மன் கோவில்களில் ஆகியவற்றில் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து திருமடத்தில் சொக்கநாதர் வழிபாடு மற்றும் குருபூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பெருவிழாவின் சிகர நிகழ்வாக தருமபுரம் ஆதின குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து பக்தர்கள் ஆதினத்தின் நான்கு வீதிகளை வலம் வரும் பட்டினப்பிரவேசம் நிகழ்வு நாளை இரவு 8 மணிக்கும் மறுநாள் அதிகாலையில் ஞான கொலு காட்சியும் நடைபெற உள்ளது.
புகழ் பெற்ற பட்டினப்பிரவேச நிகழ்வு ஏற்பாடுகளை பொது மேலாளர் ரங்கராஜன், கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி ஆகியோர் தலைமையில் ஆதின சிப்பந்திகள் செய்து வருகின்றனர்.

மேலும்
-
பிரீமியர் லீக் போட்டி: பஞ்சாப் அணி பேட்டிங்
-
அவமானப்படுத்த காங்கிரஸ் முயற்சியா: சசிதரூர் சொல்வது இதுதான்!
-
துருக்கிக்கு ஒரு நெருக்கடி: பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்த மும்பை ஐ.ஐ.டி.
-
அரசியலமைப்பை காக்க முன் வாருங்கள்; 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
-
தமிழகத்தில் இன்று 12, நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
பாகிஸ்தானை அம்பலப்படுத்த மத்திய அரசின் குழுக்கள் செல்லும் நாடுகள் பட்டியல்!