கல் குவாரிகளின் விதிமீறலை தடுக்காத 18 அதிகாரிகள் மீது வழக்கு பதிய உத்தரவு
பெங்களூரு: மாலுாரின் டேக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சட்டவிரோத கல்குவாரி தொழிலை தடுக்காமல், அலட்சியம் காட்டிய 18 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி லோக் ஆயுக்தா உத்தரவிட்டுள்ளது.
கோலார் மாவட்டம், மாலுார் தாலுகாவின் டேக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் சட்டவிரோத கல்குவாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அந்த கிராமங்களுக்கு உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா, திடீரென்று சென்று ஆய்வு செய்தார்.
கிராமங்களில் எத்தனை கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது; எத்தனை குவாரிகள், உரிமம் பெறாமல் இயங்குகின்றன என, தகவல்கேட்டறிந்தார்.
கல்குவாரிகள் சட்ட விதிகளை பின்பற்றுகின்றனவா, ஒருவேளை விதிகளை மீறியிருந்தால் வழக்குப் பதிவாகியுள்ளதா; எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறித்து, விசாரணை நடத்தினார்.
ஆய்வின்போது, கல் குவாரிகள் விதிமீறலாக இயங்குவது தெரிந்தது. 12க்கும் மேற்பட்ட குவாரிகளில், 300 அடிக்கும் அதிகமாகவும், அனுமதி பெற்றதை விட கூடுதல் ஆழத்துக்கு தோண்டப்பட்டுள்ளது பல்வேறு குவாரிகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள் இல்லை.
மகரஹள்ளி கிராமத்தில் கல்குவாரி ஒப்பந்தகாலம் 2021ல் முடிந்திருந்தும், இப்போதும் செயல்படுகிறது. கல் குவாரிகள் விதிமுறைகளை பின்பற்றாதது தெரிந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறை, வருவாய், தொழிலாளர் நலத்துறை உட்பட, பல்வேறு துறைகளின் 18 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒப்பந்த கல்குவாரி பகுதியில், பாதுகாப்பு வேலி போடப்பட்டுள்ளதா; விதிமுறைகள் மீறல் தொடர்பாக, எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன; இந்த கல் குவாரி நடத்தியவர்கள் மீது, என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விபரங்களை தெரிவிக்கும்படி, அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.