வாழை நாரில் கலைப்பொருள் பார்வையற்ற சிறார்கள் அசத்தல்

மற்ற மரங்களை விட, வாழை மரத்துக்கு ஹிந்து மதத்தில் தனி மகத்துவம் உள்ளது. இதன் ஒவ்வொரு பகுதியும், மக்களுக்கு பயன் தரக்கூடியது. இலை, தண்டு, நார், பூ என, அனைத்தும் மக்களுக்கு பயன்படுகிறது. வாழை நாரில் இருந்து, பார்வையற்ற சிறார்கள் பல விதமான பொருட்களை தயாரித்து அசத்துகின்றனர்.

உத்தரகன்னடா மாவட்டம் சிர்சியில் சேத்தனா டிரஸ்ட் உள்ளது. இந்த அமைப்பு பார்வையற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியுள்ளது. சிறார்களுக்கு வாழை நார் பயன்படுத்தி கலை பொருட்களை தயாரிப்பது குறித்து, இந்த டிரஸ்ட் பயிற்சி அளிக்கிறது. இந்த டிரஸ்ட், கடந்த 10 ஆண்டுகளாக பார்வையற்ற சிறார்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறது. அவர்கள் ஆர்வத்துடன் கற்கின்றனர்.

கலைநய பொருட்கள்



சிறார்களின் கை வண்ணத்தில் வாழை நாரில், வட்டமான அலங்கார பெட்டிகள், பேனா ஹோல்டர்கள், சாவி வைக்கும் பெட்டிகள், நோட்டு புத்தகங்கள், கவர்கள், வீட்டின் அழகை அதிகரிக்கும் அலங்கார பொருட்கள், கூடைகள், கலை பொருட்கள் என பல்வேறு பொருட்கள் தயாராகின்றன. கலை நயத்துடன் காணப்படும் பொருட்களை பார்வையற்ற சிறார்கள், மிகவும் அற்புதமாக தயாரிக்கின்றனர்.

இவர்கள் தயாரிக்கும் கலைப்பொருட்கள் பெங்களூரு, மைசூரு, ஹாசன், சிக்கமகளூரு என, கர்நாடகாவின் பல மாவட்டங்களில் நடக்கும் கண்காட்சிகளில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன், மைசூரில் கண்காட்சி நடந்தது.

இதில் வாழை மரத்தால் தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்கள், பார்வையாளர்களை கவர்ந்திழுத்தன. ஆர்வத்துடன் பார்த்ததுடன், விருப்பமான பொருட்களை வாங்கி சென்றனர்.

ஷாப்பிங்



பெங்களூரின் மெட்ரோ ஷாப்பிங் வளாகங்களிலும், இப்பொருட்கள் விற்கப்படுகின்றன. சேத்தனா டிரஸ்ட் சிறார்கள் வாழை நாரினால் மட்டுமல்ல, பேப்பர் கிராப்ட் உட்பட பல்வேறு பொருட்களுக்கு கலை வடிவம் கொடுக்கின்றனர்.

இந்த தொழில் பார்வையற்ற சிறார்களுக்கு பெரிதும் உதவுகிறது. யாரையும் சாராமல் சுதந்திரமாக வாழ, கலை பொருட்கள் உற்பத்தி தொழில், அவர்களுக்கு கைகொடுக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், இவர்கள் பங்களிப்பை அளிக்கின்றனர். வாழை மரங்களின் கழிவுகளை பயன்படுத்தி, வீட்டுக்கு தேவைப்படும் பயனுள்ள பொருட்கள் தயாரிக்கின்றனர்.


இதற்கு சேத்தனா டிரஸ்டின் ஊக்கமே காரணம். கண் பார்வையில்லை; வாழ்க்கையே இல்லை என, மனம் நொந்திருந்த சிறார்களுக்கு, ஒளி மயமான எதிர்காலத்தை உருவாக்கி தரும் டிரஸ்டின் சேவை, உண்மையில் பாராட்டத்தக்கது. இதன் சேவை மேலும் தொடர வேண்டும்.

- நமது நிருபர் -

Advertisement