பால் பண்ணையில் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி

கதக் மாவட்டம் ராமேஸ்வர் பாலேஹொசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமணப்பா மல்லப்பா, 70. தன்னிடம் உள்ள 18 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயமும், 5 ஏக்கரில் பால் பண்ணையும் வைத்துள்ளார்.

பால் பண்ணையில் 35 ஜெர்சி பசுக்களை வளர்க்கிறார். தினமும் 250 முதல் 300 லிட்டர் பால் கறக்கப்படுகிறது. 'தொட்லா' என்ற பால் நிறுவனத்துக்கு விற்பனை செய்து வருகிறார்.

பால் பண்ணையில் இவரின் ஈடுபாட்டை பார்த்த அந்நிறுவனம், இதே கிராமத்தில் அவரின் பெயரில் பால் சேகரிப்பு மையத்தை துவக்கி உள்ளது. இதன் மூலம் தினமும் 960 லிட்டர் பால் சேகரிக்கப்படுகிறது. இம்மையத்தில் மூவர் பணியாற்றி வருகின்றனர்.

இவர், 12 ஆண்டுகளுக்கு முன் பசுக்களை வளர்க்க துவக்கினார். பால் பண்ணை வைப்பதற்காக 20 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார். பால் விற்பனை, இதர செலவுகள் போக, மாதந்தோறும் 1 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறார்.

அத்துடன் ஆண்டுதோறும் 100 டிராக்டர்கள் மாட்டின் சாணத்தை, உரமாக பயன்படுத்துகிறார். இதை அவர் விற்பனை செய்வதில்லை; தன் விவசாய நிலத்துக்கு மாட்டின் சாணத்தை உரமாக பயன்படுத்துகிறார்.

அத்துடன் பால் பண்ணையில் இருந்து தென்னந்தோப்புக்கு நேரடியாக குழாய் இணைப்பு கொடுத்து, பசுக்களின் கோமியத்தை, தோப்பில் அமைந்துள்ள தொட்டியில் பாய்ச்சுகின்றனர். . இந்த கோமியம் தென்னை மரங்களுக்கு உரமாக்கப்படுகிறது.


இருபது ஆண்டுகளாக பால் பண்ணை நடத்தி வரும் ரமணப்பா மல்லப்பாவின் செயல், மற்ற விவசாயிகளுக்கு முன் உதாரணமாக உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement