மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் கான்கிரீட்டை பயன்படுத்தலாமா?

பசுமை கட்டுமானங்களை ஊக்குவிக்கும் வகையில் அரசும், தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஒரு கட்டடத்தை பசுமை கட்டுமான முறையில் கட்டுவதற்கான நடைமுறைகள் என்ன என்பதில் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது.

மின்சாரம், தண்ணீர் போன்றவற்றின் பயன்பாட்டை குறைப்பதன் வாயிலாக, பசுமை கட்டுமானம் என்ற நிலையை அடையலாம் என்று மக்கள் நினைக்கின்றனர்.

சிமென்ட் அடிப்படையிலான கான்கிரீட் அடிப்படை ஆதாரமாக உள்ள நிலையில், பசுமை கட்டுமானங்களை கட்டுவது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

ஒரு கட்டடம் அதன் முழுமையாகன ஆயுள் காலத்தை முடித்த நிலையில், அதை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி, அங்கு புதிய கட்டடம் கட்டுவது வழக்கமாக உள்ளது. இவ்வாறு ஒரு கட்டடத்தை இடிக்கும் போது அதில் கிடைக்கும் பொருட்களை மீண்டும் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

சென்னை போன்ற நகரங்களில் பழைய கட்டடங்களை இடிப்பது என்பதே பல இடங்களில் சவாலான பணியாக உள்ளது.

அக்கம் பக்கத்து கட்டடங்களுக்கு சேதம் ஏற்படாமல் பழைய கட்டடங்களை இடிக்க வேண்டும், அதில் கிடைக்கும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதும் பெரிய சவாலாக அமைந்துள்ளது.

தற்போதைய சூழலில், பசுமை கட்டுமானங்கள் என்ற அடிப்படையில், பழைய கட்டடங்களை இடிக்கும் போது கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி புதிய கட்டுமான பணிக்கான கான்கிரீட் கலவை தயாரிக்கலாம் என்று கூறப்படுகிறது. பழைய கட்டடங்களில் தளம், துாண்கள், பீம்கள் போன்றவற்றை உடைக்கும் போது கிடைக்கும் கழிவுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

கான்கிரீட் அமைப்புகளை உடைக்கும் போது அதில் உள்ள கம்பிகளை வெட்டி எடுத்துவிட்டு, கான்கிரீட் பகுதியை துகள்களாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு கிடைக்கும் துகள்களை முறையாக சேகரித்து, சுத்தப்படுத்தி, புதிய கட்டடத்துக்கான கான்கிரீட் கலவை தயாரிப்பதில் மணலுக்கு பதிலாக சேர்க்கலாம்.

உலகின் பல்வேறு நாடுகளில், பல்கலைகளில் தொடர் ஆய்வுகள் வாயிலாக கட்டட கழிவுகளை பயன்படுத்தி கான்கிரீட் தயாரிப்பது தொடர்பான ஆய்வுகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் பழைய கட்டடத்தில் இடித்து எடுக்கப்பட்ட கழிவுகளை மணலுக்கு மாற்றாக மட்டுமல்லாது, ஜல்லிகளுக்கு மாற்றாக கூட பயன்படுத்தலாம்.

பழைய கட்டடத்தின் துண்கள், பீம்கள், தளம் போன்ற பாகங்களை தேவையான அளவுகளில் உடைக்கும் நிலையில், தேவையான வடிவங்களை முடிவு செய்ய வேண்டும்.

இது போன்று மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் கான்கிரீட்டை பயன்படுத்தி கட்டப்படும் கட்டடங்களின் உறுதி தன்மையில் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது.

எனவே, மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் கான்கிரீட்டை எவ்வித அச்சமும் இன்றி பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Advertisement