ஜுலை 1ம் தேதியில் இருந்து மீண்டும் மின்கட்டண உயர்வா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: 'வாழ்க்கையின் சுமைகளையும், வரிச்சுமைகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தமிழக மக்கள் தவித்து வரும் நிலையில் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தள்ளார்.
அவரது அறிக்கை; தமிழகத்தில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் , வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வாழ்க்கையின் சுமைகளையும், வரிச்சுமைகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தமிழக மக்கள் தவித்து வரும் நிலையில் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அது தொடர்பாக அப்போது தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்கம் 3.16 விழுக்காடு எனத் தெரியவந்திருப்பதால், அந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
தமிழக மின்சார வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்வதற்காகத் தான் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இது ஒரு மாயை தான். மின்கட்டணம் உயர்த்தப்படாததால் தான் மின்சார வாரியம் இழப்பை எதிர்கொண்டு வருகிறது என்பதோ, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் மின்வாரியம் லாபத்தில் இயங்கும் என்பதோ உண்மையல்ல. இதை தமிழக மின்சார வாரியத்தின் வரவு செலவு கணக்கு குறித்த புள்ளி விவரங்களே உறுதி செய்கின்றன.
2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண உயர்வின் மூலம் அந்த ஆண்டின் 7 மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆண்டு முழுவதற்கும் கணக்கிட்டால் ரூ.31,500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்திருக்கக்கூடும். அதற்கு முன் மின்வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022-23ம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் ரூ. 10,000 கோடியாக அதிகரித்தது.
2023ம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். அதன்படி பார்த்தால் 2023-24ம் ஆண்டில் மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ரூ.6920 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் 4.83% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிலும் மின்சார வாரியம் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது தான். அதற்கு முடிவு கட்டி, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தான் மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். எனவே, ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மாறாக, மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
நெறிமுறைகளை நீதிபதிகள் மீறியிருந்தால்...: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு
-
முல்லை பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு கூடுதல் மனு
-
பத்தாம் வகுப்பில் ரோபோட்டிக்ஸ் பாடம்: கேரளாவில் கட்டாயம்!
-
மருமகனுக்கு மன்னிப்பு; மீண்டும் கட்சி பொறுப்பு வழங்கினார் மாயாவதி
-
11 புதிய நிபந்தனைகள் விதிப்பு; பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கிய ஐ.எம்.எப்.,!
-
மழையால் ரத்தான போட்டி டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்; பெங்களூரு அணி அறிவிப்பு