உயில் அடிப்படையில் சொத்து வாங்கும் போது விசாரிக்க வேண்டியவை!

வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அதன் உரிமை தொடர்பான பல்வேறு விஷயங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். ஒரு சொத்து குறிப்பிட்ட நபரிடம் இருந்து இன்னொருவருக்கு மாற்றப்படுகிறது என்றால் அதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்.
பொதுவாக, சொத்துக்கள் கிரையம் வாயிலாக தான் ஒருவரிடம் இருந்து இன்னொரு நபருக்கு மாறுவதை பார்த்து இருக்கிறோம். இதில் தானம், உயில், செட்டில்மென்ட் போன்ற வழிகளிலும் சொத்துக்கள் ஒருவரிடம் இருந்து இன்னொரு நபரின் பெயருக்கு மாற்றப்படுகிறது.
குடும்பத்தில் தந்தை சம்பாதித்த சொத்துக்களை அவர், தன் காலத்துக்கு பின் யார் அடைய வேண்டும் என்பதை முடிவு செய்ய முழு உரிமை உள்ளது. இதை அவர் உயில் எனும் ஆவணம் வாயிலாக செயல்படுத்தலாம் என்று சட்ட ரீதியான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஒரு நபர் முதுமை காரணமாக இறக்கும் நிலையில், தனக்கு பின் சொத்துக்களை யார் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அவர் பெயருக்கு உயில் வாயிலாக எழுதி கொடுக்கலாம். பொதுவாக சொத்து உரிமையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் உயில் எழுதலாம்.
சட்ட ரீதியாக வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் அடிப்படையில் உயில் ஆவணம் எழுதப்பட வேண்டும். இவ்வாறு உயில் இருக்கிறது என்பதை மட்டுமே வைத்து ஒரு நபர் அந்த சொத்தின் ஏகபோக உரிமையாளர் என்று நினைத்து அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க முடியாது,
ஒரு நபர் தன் பெயருக்கு உயில் வாயிலாக சொத்து கொடுக்கப்பட்டு இருந்தால், அந்த உயிலை சட்ட ரீதியாக மெய்ப்பிக்க வேண்டும். அதன் பின் தன் பெயருக்கு சொத்தின் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயில் வாயிலாக பெற்ற வீடு அல்லது மனையை ஒருவர் விற்பனை செய்ய முன்வரும் நிலையில், அதை வாங்க விரும்பும் நபர்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில் தெளிவு பெற வேண்டும். குறிப்பாக, அந்த உயில் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் ஏதாவது நிலுவையில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
இது மட்டுமல்லாது, உயில் எழுதி கொடுத்தவர் நிலையில் அதில் கடன் அடமான பிரச்னை, பொது அதிகார பிரச்னை, எல்லை தொடர்பான வழக்கு போன்ற பிரச்னைகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும். இந்த விஷயங்களில் ஏற்படும் தெளிவு அடிப்படையில், சொத்து வாங்கினால் பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
மேலும்
-
கலிபோர்னியாவில் வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி
-
ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பரிதாப பலி
-
மெக்சிகோ கடற்படை கப்பல் விபத்தில் சிக்கியது; 22 பேர் காயம்
-
பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு