மழையால் ரத்தான போட்டி டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்; பெங்களூரு அணி அறிவிப்பு

மும்பை: கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டி மழையால் ரத்தான நிலையில் அதற்கான டிக்கெட் கட்டணத்தை ரசிகர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.



நேற்றைய தினம் பிரிமீயர் லீக் தொடரில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டம் பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தொடர் மழை, மோசமான வானிலை காரணமாக போட்டி நடக்கவில்லை. ரத்து செய்யப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


இந் நிலையில், போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம் என்று பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட்டுகளை பெற்ற அனைவருக்கும் தொகை திரும்ப தரப்படும் என்று அறிக்கை ஒன்றின் மூலம் பெங்களூரு அணி நிர்வாகம் கூறி உள்ளது.


அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;


டிஜிட்டல் முறையில் டிக்கெட் பெற்றவர்களுக்கு 10 பணி நாளில் பணம் திரும்ப அளிக்கப்படும். எந்த வங்கிக்கணக்கு எண்ணை அளித்து டிக்கெட் முன்பதிவு செய்தீர்களோ அந்த கணக்கிற்கு பணம் திரும்ப வந்துவிடும்.


மே 31ம் தேதிக்குள் பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் டிக்கெட் தொடர்பான அனைத்து தகவல்களுடன் refund@ticketgenie.in இ மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


டிக்கெட்டை நேரிடையாக சென்று பெற்றுக் கொண்டவர்கள், அங்கேயே ஒரிஜினல் டிக்கெட்டை அளித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அன்பளிப்பாக பெற்றுக் கொண்ட டிக்கெட்டுகளுக்கு பணம் திரும்ப பெறும் நடைமுறை பொருந்தாது.


மேலும் ஏதேனும் விவரங்கள் அறிய rcbtickets@ticketgenie.in. என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement