மருமகனுக்கு மன்னிப்பு; மீண்டும் கட்சி பொறுப்பு வழங்கினார் மாயாவதி

37

லக்னோ: தமது மருமகன் ஆகாஷ் ஆனந்திற்கு பகுஜன் சமாஜ் முதன்மை தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை வழங்கி உள்ளார் மாயாவதி.



உ.பி., மாஜி முதல்வர் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி. இவரின் தம்பி ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். இவரை தமது அரசியல் வாரிசாகவும் மாயாவதி அறிவித்து இருந்தார்.


கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சி பொறுப்பு மற்றும் அரசியல் வாரிசு என்ற தகுதியில் இருந்து நீக்குவதாக மாயாவதி அறிவித்தார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த ஆகாஷ், தமது அத்தையிடம் பலமுறை நேரிலும், அறிக்கைகள் மூலமாகவும் மன்னிப்பு கேட்டார்.


இந்நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு கட்சியில் முதன்மை தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கி உள்ளார். தலைநகர் டில்லியில் இன்று நடைபெற்ற கட்சி கூட்டத்துக்கு பின்னர் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டு உள்ளார். இம்முறை கட்சியையும், இயக்கத்தையும் வலுப்படுத்த ஆகாஷ் பொறுப்புடன் செயல்படுவார் என்று தாம் நம்புவதாக மாயாவதி கூறி உள்ளார்.


நாடு முழுவதிலும் இருந்து கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


முன்னதாக, வரக்கூடிய பீகார் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்தே போட்டியிடும், கட்சியின் பலம் என்ன என்பதை அறியவே தனித்து போட்டி என்று மாயாவதி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement