நகைக்காக சினிமா பாணியில் ஒரு கொலை; மாமியாரை கொன்ற மருமகள் கைது

பந்தலூர்; நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நகைக்காக, மாமியாரை அடித்துக் கொலை செய்த மருமகள் மற்றும் அவரின் சகோதரியை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, நெலாக்கோட்டை வீரப்பன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முகமது. இவர் தனியார் பள்ளியில் காவலராக பணியாற்றி வரும் நிலையில், மனைவி மைமூனாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
கடந்த 16ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு, மாலை 6. மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். முன்பக்க கதவு பூட்டி இருந்ததால், மனைவியின் செல் போன் நம்பருக்கு அழைத்தும் பயன் இல்லாத நிலையில்,பின்பக்கம் வழியாக சென்று அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
அங்கு சமையல் அறையில் மனைவி ரத்த வெள்ளத்தில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த நெலாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, முதலில் குக்கர் வெடித்து உயிரிழந்திருக்க கூடும் என தெரிவித்தனர்.
ஆனால் சந்தேகம் ஏற்பட்டதால் இறந்தவர் உடலை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, எஸ்.பி.நிஷா, கூடுதல் எஸ்.பி. மணிகண்டன், தேவாலா டி.எஸ்.பி. ஜெயபாலன் மேற்பார்வையில் நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் 9வது மைல் என்ற இடத்தில் குடியிருந்து வரும் மைமூனாவின் மகன் சர்புதீனின் மனைவியான கைருன்னிஷா, தேவர்சோலை கொட்டாய்மேடு பகுதியில் குடியிருந்து வரும் இவரின் தங்கை அஷீனா ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது.
விசாரணையில், அஷீனா வின் கணவன் நஜூமுதீன் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு தற்போது கோவை சிறையில் உள்ளான். அவனை ஜாமீன் எடுப்பதற்கு பணம் இல்லாத நிலையில், வெளிநாட்டில் வேலை செய்து வரும், சர்புதீனுக்கு தெரியாமல், அவரது மனைவியும், அஷீனாவின் அக்காவுமான கைருன்னிஷா இருவரும் மைமூனா வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர்.
இருவருக்கும் மாமியார் டீ கொடுத்த நிலையில், அதனை குடித்துவிட்டு முதலில் கழுத்தில் துண்டை போட்டு நெரித்து, மைமூனாவை கீழே தள்ளி உள்ளனர். பின்னர் குக்கர் மூடியால் தலையில் இருவரும் தாக்கி உள்ளனர்.
தொடர்ந்து சிலிண்டரை தூக்கி தலையில் போட்டு தலை உடைந்தவுடன், குக்கர் மூடியால் மைமூனாவின் காதை கிழித்து, கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த 6 சவரன் நகைகள் மற்றும் அவரின் மொபைலை எடுத்துக்கொண்டு, பின்பக்க கதவை பூட்டி சமையல் கியாஸை திறந்துவிட்டு, முன்பக்க கதவையும் பூட்டி விட்டு சென்றதுடன், அசீனா வீட்டின் பின்பக்கம் மண்ணிற்கு அடியில் நகை மற்றும் மொபைலை மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.
முகமது மாலையில் வந்து, லைட் சுவிட்சை போட்டால் சமையல் கேஸ் வெடித்து இருவரும் இறந்து விட்டால் கொள்ளை சம்பவம் வெளியில் தெரியாமல் போய்விடும் என்பதற்காக சமையல் கியாசை திறந்து வைத்து வந்துள்ளனர்.
தனது கணவர் நஜூமுதீனை கூடலூர் சிறையில் போலீசார் தாக்கியதாக, அஷீனா புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. போலீசார் இருவரையும் கைது செய்து மறைத்து வைத்திருந்த நகை மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
ஜெயிலில் உள்ள கணவனை ஜாமீன் எடுப்பதற்கு பெண்கள் இருவர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
முறையாக நிறுத்தப்படும் ரயில் திருவாலங்காடு பயணியர் மகிழ்ச்சி
-
இலவச கண் பரிசோதனை நெல்லிக்குப்பத்தில் முகாம்
-
வனப்பகுதியில் கம்பி வேலிகள் சேதம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்
-
பைக்கில் மதுக்கடைக்கு வந்த பீர் மாவட்ட மேலாளர் விசாரணை
-
பள்ளம்பாக்கம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தவிப்பு
-
சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் பாதசாரிகளுக்கு விபத்து அபாயம்