இதே நாளில் அன்று

மே 19, 1934
கேரள மாநிலம், பாலக்காடு அருகில் உள்ள சித்துாரில், வி.கே.குஞ்சன்மேனன் -- லட்சுமி தம்பதியின் மகளாக, 1934ம் ஆண்டு, இதே நாளில் பிறந்தவர் பொறயாத்து லீலா எனும் பி.லீலா.
இவர், மணி பாகவதர், பத்தமடை கிருஷ்ணய்யர், ராம பாகவதர், செம்பை வைத்தியநாத பாகவதர் உள்ளிட்டோரிடம் கர்நாடக இசை கற்றார். தன் 12 வயதில், ஆந்திர மகிளா சபாவில் கச்சேரி செய்து, சுதந்திர போராட்ட வீராங்கனையான, துர்காபாய் தேஷ்முக்கின் பாராட்டை பெற்றார். தென் மாநிலங்களில் இவரது கச்சேரி பிரபலமானதும், கங்கணம் என்ற தமிழ் திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
பிரபல பின்னணி பாடகரான கண்டசாலாவுடன் லீலா இணைந்து பாடிய, தெலுங்கு டூயட் பாடல்களும், எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைந்து பாடிய கர்நாடக சங்கீத பாடல்களும் பிரபலம். கொஞ்சும் சலங்கை படத்தில் தனக்கு கிடைத்த, 'சிங்கார வேலனே...' பாடல் வாய்ப்பை, ஜானகிக்கும், மந்திரி குமாரி படத்தில் கிடைத்த, 'வாராய் நீ வாராய்...' பாடலை ஜிக்கிக்கும் வழங்கியவர்.
இவரின், 'மாப்பிள்ளை டோய், ராஜா மகள் ரோஜா மலர்' உள்ளிட்ட பாடல்கள் காலத்தால் அழியாதவை. குருவாயூர் கோவிலில், பள்ளியெழுச்சி பாடலாக இவரது குரலே ஒலிக்கிறது. இவர், தன் 71வது வயதில், 2005, அக்டோபர் 31ல் மறைந்தார்.
மறைவுக்குப் பின், 'பத்மபூஷண்' விருது பெற்ற தேன் குரலரசி பிறந்த தினம் இன்று!