வங்கதேச அணி அசத்தல் வெற்றி: பர்வேஸ் சதம் விளாசல்

சார்ஜா: வங்கதேச அணி 27 ரன் வித்தியாசத்தில் யு.ஏ.இ., அணியை வீழ்த்தியது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. சார்ஜாவில் முதல் போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற யு.ஏ.இ., அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.
வங்கதேச அணிக்கு டான்ஜித் ஹசன் (10), கேப்டன் லிட்டன் தாஸ் (11) சோபிக்கவில்லை. தவ்ஹித் (20) ஆறுதல் தந்தார். தனிநபராக அசத்திய பர்வேஸ் ஹொசைன் எமோன் 54 பந்தில், 9 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 100 ரன் எடுத்து கைகொடுத்தார். வங்கதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்தது. யு.ஏ.இ., சார்பில் முகமது ஜவாதுல்லா 4 விக்கெட் வீழ்த்தினார்.


சவாலான இலக்கை விரட்டிய யு.ஏ.இ., அணிக்கு கேப்டன் முகமது வாசீம் (54), ஆசிப் கான் (42), ராகுல் சோப்ரா (35) நம்பிக்கை தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற யு.ஏ.இ., அணி 20 ஓவரில் 164 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட் சாய்த்தார்.


பர்வேஸ் சாதனை
சர்வதேச 'டி-20' அரங்கில் அதிவேக சதம் (53 பந்து) விளாசிய வங்கதேச வீரரானார் பர்வேஸ் ஹொசைன் எமோன். இதற்கு முன் தமிம் இக்பால் 60 பந்தில் (எதிர்: ஓமன், 2016) சதம் அடித்திருந்தார்.
* சர்வதேச 'டி-20' அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் (9) விளாசிய வங்கதேச வீரரானார் பர்வேஸ். இதற்கு முன், ரிஷாத் ஹொசைன் 7 சிக்சர் (எதிர்: இலங்கை, 2024) அடித்திருந்தார்.

Advertisement