ரூ.20 கோடி வைரம் மாயமான விவகாரம்: போலி வந்தது எப்படி என போலீசார் தவிப்பு

சென்னை: கொள்ளையரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்திற்கு பதிலாக, போலி வைரம் எப்படி வந்தது என, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 56; தங்கம், வைர வியாபாரி. இவரை, கடந்த 4ம் தேதி, வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், மர்ம நபர்கள் கட்டிப்போட்டு, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை கொள்ளைஅடித்து சென்றனர்.
கைது செய்தனர்
இதுதொடர்பாக, வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து, 24 மணி நேரத்திற்குள், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜான் லாயிட், 34; உட்பட நான்கு பேரை கைது செய்தனர். வைரத்தையும் மீட்டனர்.
இந்நிலையில், கொள்ளையரிடம் பறிமுதல் செய்த வைரத்துக்கு பதிலாக, அதே போன்ற போலி வைரத்தை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அதன் உண்மை தன்மை குறித்து, நீதிபதிக்கு சந்தேகம் எழுந்ததால், போலீசார் வைரத்தை சோதனை செய்ததாக கூறப்படும் நிறுவனத்திற்கு, சம்மன் அனுப்பி உள்ளார்.
அதேநேரத்தில், 'போலீசார் என் வைரத்தை மோசடி செய்து விட்டனர்' என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வியாபாரி சந்திரசேகர் மூன்று நாட்களுக்கு முன் புகார் அளித்துள்ளார். அதன்மீது போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
புகார்தாரர் சந்திரசேகருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஆனால், வைரம் விற்க, வளர்ப்பு மகள் ஜானகி, புதுக்கோட்டையைச் சேர்ந்த சுப்பிர மணியன் ஆகியோரை அழைத்து சென்றுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த தொழில் அதிபர், வைரத்தை விற்று தரும்படி தன்னிடம் கூறியதாக, போலீசாரிடம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஆனால், எழுத்துப்பூர்வமான புகாரில் அந்த நபர் குறித்து ஒரு இடத்திலும் தெரிவிக்கவில்லை.
வைரம் விவகாரத்தில், சந்திரசேகரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்து வருகிறார். இதனால், மதுரையைச் சேர்ந்த தொழில் அதிபரும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
கொள்ளையரிடம் பறிமுதல் செய்த வைரத்தை, சந்திரசேகர் தரப்பில் கடைசியாக, ஜானகி, சுப்பிரமணி யன், மாசானம், வன்னிய ராஜன் ஆகியோர் பார்த்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடக்கிறது.
வைரக்கல்லின் தொன்மை மற்றும் அதன் உறுதித்தன்மை குறித்து, போலீசார் இரண்டு நிறுவனங்களை சேர்ந்த மதிப்பீட்டாளர்களிடம் ஆய்வு செய்துள்ளனர்.
தவறு நடந்ததா?
அந்த இடத்தில் ஏதேனும் தவறு நடந்ததா என்றும் விசாரணை நடக்கிறது. வைரத்தை துாத்துக்குடி மாவட்ட போலீசார் பறிமுதல் செய்து, சென்னை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடக்கிறது.
பறிமுதல் செய்த வைரக்கல்லை தான் நீதிமன்றத்தில் ஒப்படைத்தோம் என, வடபழனி போலீசார் வாக்குமூலம் அளித்துள்ளனர். அப்படியானால், போலி வைரம் எப்படி வந்தது என்பது மர்மமாகவே உள்ளது. விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


