ரூ.38 லட்சம் ஹவாலா பணம் சென்னையில் பறிமுதல்

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு, ரயிலில், 38 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கடத்தி வந்த வாலிபர் பிடிபட்டார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க, ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் ராமகிருஷ்ணன் தலைமையில், போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
காலை, 6:00 மணிக்கு நடைமேடை 9க்கு வந்த, காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவரின் நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அவரை பிடித்து விசாரித்த போது, அவர் ஆந்திராவை சேர்ந்த நரேஷ், 33 என, தெரியவந்தது. அவர், ஆந்திர மாநிலம் சீராலாவில் இருந்து, சென்னைக்கு வந்துள்ளார். அவரது உடைமைகளை சோதனை செய்த போது, கட்டுக் கட்டாக, 500 ரூபாய் நோட்டுகளாக, 38 லட்சம் ரூபாய் இருந்தது. தொடர் விசாரணையில், அது ஹவாலா பணம் என்பது தெரியவந்தது.
இந்த பணம் யாருக்கு சொந்தமானது, சென்னையில் யாரிடம் ஒப்படைக்க கடத்தி வந்தார் என்று கேட்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
எனவே, கடத்தி வந்த பணத்துடன் அவரை வருமான வரித்துறை அதிகாரி பத்மநாபன் குழுவினரிடம், ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.