பாலிடெக்னிக் கல்லுாரி விடுதியில் மாணவர்களை தாக்கிய கும்பல்

திருச்சி: திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இயங்கி வரும் ஆதிசங்கரா பாலிடெக்னிக் கல்லுாரி விடுதியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, மூன்று பைக்குகளில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல் விடுதிக்குள் புகுந்து, மாணவர்கள் தங்கி இருக்கும் அறைகளின் கதவை அடித்து உடைத்துள்ளனர். அறைகளில் தங்கியிருந்த மாணவர்களை அடித்து உதைத்து உள்ளனர்.

பயத்தில் மாணவர்கள் கூச்சலிட்டதால், அந்த கும்பல், மாணவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து, சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டிஉள்ளனர்.

தொடர்ந்து, மாணவர்களின் பெட்டிகளில் வைத்து இருந்த தங்கச்செயின் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு, மாணவர்களிடம் இருந்து 13 மொபைல் போன்களையும் பறித்துக்கொண்டு, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மர்ம கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த வினோத், சந்தோஷ் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த சமயபுரம் போலீசார், பாலிடெக்னிக் கல்லுாரி விடுதியில் புகுந்து மாணவர்களை தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர்.

Advertisement