இடுக்கி மாவட்டம் அதிக சுற்றுலா பயணிகள் வருகை மூலம் சாதனை படைத்துள்ளது கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

மூணாறு: ''கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகையின் மூலம் சாதனை படைத்துள்ளது,'' என, அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தின் இடுக்கி 'ஆர்ச்' அணை அருகில் 5 ஏக்கரில் நினைவு சுற்றுலா கிராமம் ரூ.3 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 20ம் நுாற்றாண்டில் இடுக்கி மாவட்டத்திற்கு பல பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்த விவசாயிகளின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் சிற்பங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மக்கள் குடியேறிய விதம், வெளியேற்றப்பட்ட வரலாறு, விவசாயிகளின் வாழ்க்கை தரம், காட்டு யானைகளை விரட்ட கையாண்ட யுக்திகள் உள்ளிட்ட மக்கள் அனுபவித்த துயரங்கள் நினைவு சுற்றுலா கிராமத்தில் இடம் பெற்றுள்ளன. நினைவு சுற்றுலா கிராமத்தை 'காணொலி' வாயிலாக சுற்றுலாத்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ் நேற்று துவக்கி வைத்தார்.

செருதோணியில் நடந்த விழாவிற்கு நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சித்தலைவர் ராரிச்சன், கலெக்டர் விக்னேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் காணொலி வாயிலாக பேசியதாவது: இந்தாண்டு முதல் மூன்று மாதங்களில் இடுக்கி மாவட்டத்திற்கு அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தந்ததன் மூலம் சாதனையை படைத்துள்ளது. இம்மாவட்டத்தில் முதல் மூன்று மாதங்களில் 9 லட்சத்து 84 ஆயிரத்து 645 பயணிகள் வந்து சென்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 25 சதவிகிதம் அதிகம்.

கொரோனா காலத்துடன் ஒப்பிடுகையில் 186.29 சதவிகிதம் அதிகம். இடுக்கி மாவட்டத்திற்கு முதல் மூன்று மாதங்களில் வெளிநாட்டு பயணிகள் 53,003 பயணிகள் வந்தனர். இது கடந்தாண்டை விட 4 சதவிகிதம் அதிகம், என்றார்.

நினைவுச் சுற்றுலா கிராமத்தில் நுழைவு கட்டணம் விரைவில் முடிவு செய்யப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement