சென்டாக் கலந்தாய்வினை உடனே துவங்க வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் சென்டாக் கலந்தாய்வினை உடனே துவங்க வேண்டுமென, மாணவர்கள், பெற்றோர் நலச்சங்கத் தலைவர் பாலாசுப்ரமணியன் கவர்னருக்கு மனு அளித்துள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள், மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் போன்ற பாடப்பிரிவிற்கு சென்டாக் மூலம் முழுமையான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் மருத்துவப்படிப்பிற்கு தனித்தனி அமைப்பின் மூலம் கலந்தாய்வும், பொறியியல் படிப்பிற்கு தனி கலந்தாய்வும், கலை அறிவியல் படிப்பிற்கு தனி கலந்தாய்வும் மற்ற பாடப்பிரிவுகளுக்கு தனித்தனி கலந்தாய்வு நடத்துகின்றன.

ஆனால், புதுச்சேரி சென்டாக் அமைப்போ, மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவு, செவிலியர் படிப்பு போன்ற அனைத்தையும் ஒரு நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்துவதால், பல்வேறு சிரமங்களுக்கு மாணவர்கள் உட்படுத்தப்படுகின்றனர்.

ஏற்கனவே, உயர்கல்வி கட்டணக்குழு கடந்த 2024-25, 2025-26, 2026-27 அனைத்து உயர்கல்வி படிப்பிற்கும் கட்டணங்களை நிர்ணயம் செய்துவிட்டது. ஆகையால், சென்டாக் கலந்தாய்வினை உடனடியாக தொடங்கிட சென்டாக் தலைவர், உறுப்பினர் ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement