முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: '' ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.



டில்லியில், இந்திய போட்டி ஆணையத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்தியாவில் நடக்கும் சொத்துகளை பணமாக்குதல், பங்குகளை திரும்பப் பெறுதல் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உள்ள கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியன சந்தை திறனை திறப்பதற்கும் போட்டியை தூண்டும் வகையிலும் இருக்கிறது.


ஒழுங்குமுறை ஒப்புதலில் ஏற்படும் தாமதம் என்பது, நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவதுடன், வணிக காலக்கெடுவிற்கு இடையூறு ஏற்படுத்தும். சர்வதேச அளவில், பல நாடுகளுடன் நாம் நடத்தும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திலும் தாக்கத்தை உண்டாக்கும்.


இதற்கு ஒழுங்குமுறை அதிகாரிகளின் திறன், தகுதி மற்றும் தயார்நிலையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள்.ஒழுங்குமுறை கட்டமைப்புகள் கடுமையான மேற்பார்வை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றாலும், போட்டிக்கு அச்சுறுத்தல் இல்லாத இணைப்புகள் மற்றும் கையகபடுத்துதலுக்கு விரைவான மற்றும் தடையற்ற ஒப்புதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement