முன்கூட்டியே துவங்கும் பருவமழை; கேரளாவில் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்தது வானிலை மையம்!

1


திருவனந்தபுரம்: கேரளாவில் நான்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன.


தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 4 அல்லது 5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.


நிலச்சரிவு, திடீர் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.


பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கனமழையால் திடீர் வெள்ளம், போக்குவரத்து இடையூறுகள் மற்றும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. வானிலை அறிவிப்புகளைக் கண்காணித்து, வழங்கப்படும் அனைத்து ஆலோசனைகளின் படியும் விரைவாகச் செயல்படுமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

பெங்களூருவில் 5 பேர் பலி!

கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவின் பெங்களூருவில் பல பகுதிகளில் பரவலாக மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

36 மணி நேரமாக இடைவிடாது பெய்து வரும் மழையால், தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மின்விபத்து, சுவர் இடிந்தது என மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement