நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழில்துறை செயலர் ரூ.25 லட்சம் செலுத்த உத்தரவு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மனுதாரர்களுக்கு ரூ.20 லட்சம், தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம், மொத்தம் ரூ.25 லட்சம் செலுத்த தமிழக தொழில்துறை முதன்மைச் செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ஸ்ரீனிவாசநல்லுார் காவிரி ஆற்றில் 2001 டிச.,20 முதல் 2004 டிச.,19 வரை மணல் குவாரி நடத்த சாந்தி உட்பட 5 பேருக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டது. கனிமவள விதிகள்படி மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த தமிழக அரசு 2003 அக்.,1ல் அரசாணை வெளியிட்டது.
இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கலாகின. அரசாணையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், மனுதாரர்களுக்கு சாதகமாக சில வழிகாட்டுதல்கள் பிறப்பித்தது. மனுதாரர்களுக்கு சாதகமாக பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 2005 ல் மேல்முறையீடு செய்தது.
அரசாணையை உறுதி செய்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே உரிமம் பெற்று 2003 அக்.,2 ல் வைத்திருந்த குத்தகைதாரர்கள் 6 மாதங்களுக்கு குவாரி நடவடிக்கைகளை தொடரலாம்' என 2006 ல் உத்தரவிட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
சில காரணங்களால் சாந்தி உள்ளிட்டவர்கள் குவாரி நடவடிக்கைகளை துவங்க முடியவில்லை. குவாரி உரிம அனுமதி காலம் காலாவதியானது. குவாரி உரிமத்திற்கான காலத்தை நீட்டிக்கக்கோரி அரசிடம் மனு அளித்தனர். அனுமதிக்குரிய காலம் ஏற்கனவே காலாவதியாகிவிட்டதாக கூறி நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சாந்தி உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
உயர்நீதிமன்றம், 'மனுதாரர்கள் குவாரி குத்தகையை நீட்டிக்க அரசை அணுக வேண்டும்' என 2010ல் உத்தரவிட்டது. இதன்படி மனுதாரர்கள் சமர்ப்பித்த குத்தகைக்கால நீட்டிப்பு மனுவை அரசு நிராகரித்தது. சாந்தி உள்ளிட்டோர், 'உச்சநீதிமன்ற நிபந்தனைகளுடன் மணல் அள்ள எங்களுக்கு சாதகமாக 2010ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை நிறைவேற்றாததால் தமிழக தொழில்துறை முதன்மைச் செயலராக இருந்த முருகானந்தன், திருச்சி கலெக்டராக இருந்த சிவராசு மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என 2015ல் மனு செய்தனர். நீதிபதி கே.குமரேஷ்பாபு: நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 15 ஆண்டுகளாகிறது. அதிகாரிகள் மாறிவிட்டனர். தற்போது பதவியில் இருப்பவர்களை தண்டிப்பதால் எந்த பயனும் இல்லை.
நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே நிறைவேற்றாததால், தொழில்துறை முதன்மைச் செயலர் மனுதாரர்களுக்கு மொத்தம் ரூ.20 லட்சம், தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

மேலும்
-
சுமித் நாகல் வெற்றி * பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்றில்
-
பாலியல் புகாரில் தி.மு.க., நிர்வாகி மீது கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்: சீமான் கேள்வி
-
மேற்கு வங்க கலவரம் நடந்தது எப்படி: விசாரணை அறிக்கையில் பகீர் தகவல்
-
ஜார்க்கண்டில் கன மழை: மின்னல் தாக்கியும் நீரில் மூழ்கியும் 7 பேர் பலி
-
ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு
-
திக்வேஷ் ரதிக்கு தடை