பாலியல் புகாரில் தி.மு.க., நிர்வாகி மீது கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்: சீமான் கேள்வி

சென்னை:அரக்கோணம் அரசுக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை புகாரில் குற்றவாளிகள் மீது இதுவரை எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல், திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாகவும், ஏற்கனவே இதேபோன்று 20 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி தவறாக பயன்படுத்தி வருகிறார் என்கின்ற செய்தியும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
திமுக இளைஞரணி அமைப்பாளர் தெய்வச்செயலின் மோசடிச்செயல் குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஆதாரப்பூர்வமாக காவல்துறையில் புகாரளித்தும், தமிழ்நாடு காவல்துறை தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
யாரை காப்பாற்ற, யாருடைய உத்தரவின்பேரில் காவல்துறை இப்படி ஒருதலைபட்சமாக செயல்படுகிறது?
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஐந்து ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு, குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனைக்கு தாங்கள்தான் காரணம் என்று பெருமை பேசிய திராவிட மாடல் அரசின் முதல்வர் ஸ்டாலின், அரக்கோணம் மாணவி அளித்துள்ள பாலியல் புகார் குறித்து வாய் திறவாமல் அமைதி காப்பது ஏன்?
சொந்த கட்சிகாரர்கள் என்பதால் இதுபோன்ற கொடுங்குற்றவாளிகளைக் காப்பாற்றி இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை திமுக அரசு சீரழிக்கப்போகிறது?
இதற்கு பெயர்தான் திராவிட மாடலா?
இதுதான் திமுக கட்டிக்காக்கும் பாலியல் சமத்துவமா? பெற்றுதந்த பெண்விடுதலையா? என்ற கேள்விகள் எழுகிறது.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக தொடரும் இதுபோன்ற பாலியல் தாக்குதல்களை இனியேனும் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் தேர்தலில் திமுக அரசிற்கு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் எனவும் எச்சரிக்கிறேன்.
இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும்
-
டி.கள்ளிபட்டியில் 850 பேருக்கு பட்டா வழங்க ஏற்பாடு தீவிரம்
-
மா ஏற்றுமதி செய்திட முன் வர வேண்டும் : கலெக்டர் பேச்சு கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
-
329 ரவுடிகளுக்கு சிறை
-
விருதுநகரில் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து
-
பி.எஸ்.ஆர்., பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பாராட்டு
-
ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை இடிக்க நகராட்சி அதிகாரிகள் முயற்சி