மேற்கு வங்க கலவரம் நடந்தது எப்படி: விசாரணை அறிக்கையில் பகீர் தகவல்

12

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வக்ப் சட்டத்திற்கு எதிராக கலவரம் எப்படி நடந்தது என்பது குறித்து ஐகோர்ட் அமைத்த குழு அறிக்கை தயார் செய்துள்ளது.


பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தில் முர்ஷிதாபாத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் ஹிந்து குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.


இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில சட்ட சேவை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழுவை கோல்கட்டா ஐகோர்ட் அமைத்தது.இக்குழுவினர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.


இந்த குழுவின் அறிக்கை இன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அது குறித்த தகவல்கள் வெளியாக துவங்கி உள்ளது.


அதில் கூறப்பட்டு உள்ளதாவது: முர்ஷிதாபாத் கலவரத்தை திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் மெகபூப் ஆலம் என்பவர் ஒருங்கிணைத்துள்ளார். அப்போது உள்ளூர் போலீசார், இதனைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பவ இடத்திற்கும் வரவில்லை.


ஏப்.11 ம் தேதி மதியம் 2:30 மணிக்கு சம்சர்கன்ஜ், ஹிஜல்டாலா, ஷியுலிடாலா, திக்ரி பகுதியை சேர்ந்தவர்களை முகமூடி அணிய வைத்து மெகபூப் ஆலம் அழைத்து வந்தார்.வன்முறையில் சேதம் அடையாத வீடுகளுக்கு கலவரக்காரர்கள் தீவைத்தனர்.


பெட்போனா என்ற கிராமத்தில் உதவி கேட்டு பொது மக்கள் தொலைபேசியில் அழைத்தும் அதற்கு போலீசார் எந்த பதிலளிக்கவில்லை. அங்கே எம்.எல்.ஏ., இருந்தும் எதுவும் செய்யவில்லை. வன்முறையை பார்த்த அவர் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார்.தீயை அணைக்க முடியாதபடி கலவரக்காரர்கள் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதனால் 113 வீடுகள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த வீடுகள் புனரமைக்க முடியாதபடி உள்ளது.


கலவரத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், உறவினர்களிடம் தஞ்சம் புகுந்தனர்.மறுநாள் ஹிந்து பெண் மற்றும் அவரது குழந்தை, அருகில் வசித்த முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். கடைகள் மற்றும் சந்தைகள் அழிக்கப்பட்டன. போலீஸ் ஸ்டேசன் இருந்த வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள் மற்றும் பல சரக்குக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement