திக்வேஷ் ரதிக்கு தடை

லக்னோ: லக்னோ பவுலர் திக்வேஷ் ரதிக்கு, ஒரு பிரிமியர் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
லக்னோவில் நடந்த பிரிமியர் தொடர் லீக் போட்டியில் ஐதராபாத் அணியிடம் தோற்ற லக்னோ அணி, 'பிளே ஆப்' வாய்ப்பை இழந்தது. இப்போட்டியில் ஐதராபாத் அணி துவக்க வீரர் அபிஷேக், சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி பந்தில் அவுட்டானார். அபிஷேக்கை பார்த்து 'டாடா' காண்பித்து, வெளியே போ என்றும், தனது வழக்கமான பாணியில் பெயரை எழுதி, சீட்டை கிழிப்பது போல ('நோட் புக்' கொண்டாட்டம்) சைகை செய்தார்.
இதைப் பார்த்த அபிஷேக், திக்வேஷை நோக்கி வர, இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அம்பயர்கள் தலையிட்டு சமாதானம் செய்து அனுப்பினர். திக்வேஷின் இச்செயல், பிரிமியர் நடத்தை விதிகளை மீறிய செயல். ஏற்கனவே பஞ்சாப், மும்பை அணிக்கு எதிராக இதுபோல தவறு செய்துள்ளார். இது மூன்றாவது விதிமீறல் ஆக, 5 தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டது. 4 புள்ளிக்கு மேல் பெற்றால் ஒரு போட்டியில் பங்கேற்க முடியாது. இதனால் திக்வேஷ், நாளை குஜராத் அணிக்கு எதிராக பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இவரது போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல அபிஷேக்கிற்கு 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.