மண்டபம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பிலான சுறா துடுப்புகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்

ராமேஸ்வரம் :ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் பகுதியில் கொலை தொடர்பாக ஒருவரை தேடிச் சென்றபோது கடற்கரை அருகே வீட்டின் பின்புறம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான சுறா துடுப்புகள், சுக்கு, செருப்பு அடங்கிய 23 சாக்கு பண்டல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த தினைக்குளம் கடற்கரையில் கடந்த சனிக்கிழமை இரவு ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியை சேர்ந்த செய்யது அப்துல்லா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

உடலை கைபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் செய்யது அப்துல்லா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து கொலை செய்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் செய்யது அப்துல்லா கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரை அருகே வசித்து வரும் ஆசிப் என்பவரின் வீட்டிற்கு திருப்புல்லாணி காவல் நிலைய சிறப்பு பிரிவு போலீசார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு விசாரணைக்காக சென்றனர்.

ஆனால் ஆசிப் வீடு பூட்டப்பட்டிருந்ததால் வீட்டின் பின்புறம் உள்ள கடற்கரை வரியக வீட்டிற்குள் சென்ற போலீசார் வீட்டின் பின்புறம் இருந்த குடிசையை சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்துவதற்காக கடத்தல் பொருட்கள் அடங்கிய 23 சாக்கு மூட்டைகள் பதுக்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூட்டைகளை எடுத்து போலீசார் சோதனை செய்த போது அதில் 15 மூட்டைகளில் சுறா துடுப்புகளும் , 4 மூட்டைகளில் சுக்கு (காய்ந்த இஞ்சி) 4 மூட்டைகளில் செருப்புகள் இருந்ததுள்ளது. 23 மூட்டைகளையும் பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீசார் அதனை மண்டபம் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், சுறா துடுப்புகள் 40 லட்சம் ரூபாய், அதேபோல் செருப்பு மற்றும் சுக்கு 10 லட்சம் ரூபாய் என மொத்தமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தலைமறைவான வீட்டின் உரிமையாளர் ஆசிப் என்பவரை தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தலைமறைவாகியுள்ள ஆசிப் மீது பல்வேறு கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement