பின்தங்கிய சாத்விக்-சிராக் ஜோடி * பாட்மின்டன் தரவரிசையில்...

புதுடில்லி: பாட்மின்டன் தரவரிசையில் கடந்த 6 ஆண்டில் இல்லாத அளவுக்கு, சாத்விக்-சிராக் ஜோடி முதன் முறையாக 'டாப்-20' பட்டியலில் இடம் பெறவில்லை.
சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. ஆண்கள் இரட்டையரில் முன்னாள் 'நம்பர்-1' ஜோடி இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி. 2024 ஒலிம்பிக்கில் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதன் பின் சீன மாஸ்டர்ஸ் தொடரில் மட்டும் பங்கேற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
2025ல் ஆல் இங்கிலாந்து தொடரில் மட்டும் விளையாடியது. பின் காயத்தால் விலகியது. அடுத்து எவ்வித தொடரிலும் பங்கேற்காத நிலையில் 19 வது இடத்தில் இருந்து 6 இடம் பின்தங்கி, 25 வது இடத்துக்கு (43.060 புள்ளி) தள்ளப்பட்டது. முன்னதாக 2019, மே மாதம் இந்த ஜோடி 23வது இடத்தில் இருந்தது. தற்போது 6 ஆண்டில் இல்லாத அளவுக்கு மோசமான இடத்தில் பின்தங்கியது.
பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து, 16 வது, ஆண்கள் ஒற்றையரில் லக்சயா சென் 18 வது இடத்தில் உள்ளனர். பெண்கள் இரட்டையரில் திரீஷா-காயத்ரி ஜோடி 10வது இடத்தில் நீடிக்கிறது. கலப்பு இரட்டையரில் தனிஷா-துருவ் ஜோடி 18வது இடம் பெற்றது.