தி.மு.க.,விடம் வெளிப்படைத்தன்மை கிடையாது: ஆதவ் அர்ஜூனா

6

சென்னை: '' தி.மு.க.,விடம் வெளிப்படைத்தன்மை கிடையாது. பிரச்னைகளை மறைக்க வேண்டும் என்பதே அக்கட்சியின் நோக்கம்,'' என த.வெ.க.,வின் ஆதவ் அர்ஜூனா கூறினார்.


நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு, வக்ப் சட்டத்திற்கு எதிராக ஏன் வாதாடவில்லை?. தி.மு.க.,வை தாக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல. இந்த விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு விளம்பர மாடல் அரசாக தி.மு.க., அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது. அனைத்துக் கட்சிகளும் போராடியதால், அன்றைய தமிழக அரசு, விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றியது. இது பாராட்டுக்குரியது. இந்த வழக்கில் தமிழக போலீசாரின் பங்கு என்ன? தமிழக அரசு எப்படி உரிமை கொண்டாட முடியும். இந்த வழக்கில் சி.பி.ஐ., உரிமை கோரவில்லை. தி.மு.க., என்றாலே பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகும்.


தி.மு.க.,விடம் வெளிப்படைத்தன்மை கிடையாது. பிரச்னைகளை மறைக்க வேண்டும் என்பது அக்கட்சியின் நோக்கம். பிரச்னை வரும் போது இரு மொழி கொள்கை, தொகுதி மறுவரையறையை எடுப்பார்கள். ஊழல் பிரச்னை வந்தால் பா.ஜ.,வை எதிர்ப்போம் என காட்டிக் கொள்கிறார்கள். மாநில பிரச்னைகளை மறைப்பதற்காக பழைய பிரச்னைகளை எடுத்து திசை திருப்புகின்றனர்.


அரசியல் எதிரி தி.மு.க., கொள்கை எதிரி பா.ஜ., என விஜய் கூறினார். அதே மனநிலையில் தான் அவர் இருக்கிறார். எதிர்க்கட்சியை ஏன் எதிர்க்க வேண்டும் என புரியவில்லை. அதிமுக - பா.ஜ., கூட்டணிக்கு மறுநாளே எதிராக அறிக்கை வந்துவிட்டது. எங்களின் நிலைப்பாடு தெரிவித்துவிட்டோம். அதிமுக., பல தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சியை எதிர்க்கக்கூடிய திட்டம் என்னவாக இருக்கும். 2026 ல் தேர்தல் முடிவின்போது தி.மு.க.,வின் இறுமாப்பு எங்கு இருக்கிறது என பார்ப்போம். த.வெ.க., பிரசாரமும், மக்கள் சந்திப்பும் டிச., மாதத்திற்குள் பேரதிர்வை உருவாக்கும். இவ்வாறு ஆதவ் அர்ஜூனா கூறினார்.

Advertisement