பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன பெண் யூடியூபரின் ரகசிய டைரி மீட்பு!

6

புதுடில்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் ரகசிய டைரியை போலீசார் மீட்டுள்ளனர்.



இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசத்தில் இருந்து 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, டில்லி பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவர் மூலம், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.


பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஊடகங்களில் பிரசாரம் செய்வது; நமது ராணுவம் தொடர்பான தகவல்கள், விமானப்படை தளங்கள் உள்ளிட்ட தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அளிப்பது போன்ற உளவு வேலைகளை பார்த்துள்ளனர்.

இவர்களில் முக்கியமானவராக கருதப்படும் ஹரியானாவை சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி என். ஐ. ஏ., ஐ.பி., மற்றும் ஹரியானா போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில், பல உண்மைகள் தெரியவந்தன.

இவர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்துள்ளார். பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லை வரை தொடர்புகளை ஜோதி ஏற்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது.


ஊடகங்களில் செல்வாக்குள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தந்து, உளவு பார்க்கும் வேலைக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புகள் பயன்படுத்தி உள்ளது. அந்த வலையில்தான் ஜோதியும் சிக்கியுள்ளார்.


ஜோதிக்கு யுடியூபில் 4 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், இன்டாகிராமில் 1.32 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உளவு பார்க்கும் வேலை தவிர, இந்தியர்களிடையே பாகிஸ்தாஸ் பற்றி பாசிட்டிவ் பிம்பத்தை உருவாக்கும் வகையில் பிரச்சாரம் செய்யும் பணியும் வழங்கப்பட்டு இருக்கிறது.


பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த டேனிஷ் உடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகள் பற்றி, ஜோதி மல்ஹோத்ரா ஆரம்பத்தில் மறுத்தார். அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில், டேனிஷ் உடன் சேட்டிங் செய்த மெசேஜ்களை அவர் டெலிட் செய்து இருந்தது தெரிந்தது.

அதுபோல், பாகிஸ்தான் ஏஜென்ஸிகளிடம் இருந்தும் ஜோதிக்கு ரகசிய உத்தரவுகள் வந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது மொபைல் போன் தடயவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.


பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஜோதி மல்ஹோத்ரா சென்றுவந்துள்ளார். 3 முறை பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானில் பைசாகி திருவிழா செய்தி சேகரிக்க சென்ற ஜோதி, திருவிழா முடித்து 20 நாட்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்தார். இந்தியா திரும்பிய 1 மாதத்திற்கு பிறகு சீனா சென்றுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்தபோதே, அவரது சீன பயணம் திட்டமிடப்பட்டதா? அது பாகிஸ்தான் ஏஜென்சிகளின் அசைன்மென்ட்டா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


பாகிஸ்தான் விசிட் பற்றி ஜோதியின் பர்சனல் டைரியில் சில குறிப்புகள் உள்ளன. அதில், பாகிஸ்தானியர்களிடம் இருந்து நிறைய அன்பு கிடைத்தது. எல்லைகளை தாண்டிய இந்த தூரங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்கு தெரியும். இதயங்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒரே மண்ணை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement