வல்லக்கோட்டை முருகன் கோவில் உண்டியல்களை உடைத்து கொள்ளை

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பழமையான வல்லக்கோட்டை முருகன் கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகபெருமான் அருள்பாலிக்கிறார்.

கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். தற்போது, 1.25 கோடி ரூபாய் மதிப்பில், கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம், அதன்படி, கடந்த பிப்ரவரியில், 10 உண்டியல் திறக்கப்பட்டதில், 29 லட்சத்து 36,841 ரூபாய் பணம், 70 கிராம் தங்கம், 1,900 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், திரிபுரசுந்தரி அம்மன் சன்னிதி, சண்முகர் சன்னிதியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உண்டியல்களை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த காவலர் வெங்கடேசன், உண்டியல் உடைந்திருப்பதை கண்டார்.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில், ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வரும் ஜூலையில், கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில், மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைந்து கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

Advertisement