ஆயிரம் எக்டேரில் மக்காச்சோள சாகுபடி

தேனி : மத்திய அரசின் மானிய திட்டத்தில் ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய பணிகள் நடந்து வருவதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

மத்திய அரசின் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய இலக்குநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வட்டாரம் வாரியாக ஆண்டிபட்டி, தேனி தலா 240 எக்டேர், கடமலைக்குண்டு, பெரியகுளம் தலா 60, உத்தமபாளையம், சின்னமனுார் தலா 50 எக்டேர், போடி 295, கம்பம் 5 எக்டேர் என மொத்தம் ஆயிரம் எக்டருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. ஒரு எக்டேருக்கு ரூ.2500 மதிப்பிலான விதை, திரவ உயிர் உரங்கள், அங்கக உரங்கள், நானோ யூரியா என ரூ.6ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட உள்ளன. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் இரு எக்டேர் வரை விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement