நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டோருக்கு பணம் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் பொறுப்பு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதுரை:'மோசடி வழக்குகளில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்வது மட்டும் உதவாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்பக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு அரசுக்கு உள்ளது' என, நியோமேக்ஸ் மோசடி வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு அறிவுறுத்தியது.

முத்துக்குமரன் என்பவர் தாக்கல் செய்த மனு:

நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் மற்றும் அதன் துணை நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தேன். ஏமாற்றப்பட்டேன்.

நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 2023ல் வழக்கு பதிந்தனர். நியோமேக்ஸ் மற்றும் துணை நிறுவனங்களுக்கு மதுரை, திருச்சி மாவட்டங்களில் சொத்துக்கள் உள்ளன.

அவற்றை முடக்க வலியுறுத்தி பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி., -- எஸ்.பி., -- மதுரை டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

கடமை

நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

அதிக லாபம் தருவதாக உறுதியளித்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி, பின் பணத்தை திரும்ப வழங்கத் தவறிய நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டமான டான்பிட், 1997ல் இயற்றப்பட்டது.

தமிழகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு 2000 முதல் செயல்படத் துவங்கியது.

ஒரு வழக்கு பதிவான பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் இருப்பதாக தெரிகிறது. குற்றங்களை தடுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

எந்தவொரு நிறுவனமும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த விகிதத்திற்கு மேல் வட்டி வழங்கினால், டிபாசிட் வசூலிக்க பதிவு செய்துள்ளதா அல்லது அதற்கு உரிமை உள்ளதா, அதிக வட்டி வழங்க அவர்களுக்கு வழிவகை உள்ளதா என்பதை உறுதி செய்வது பொருளாதார குற்றப்பிரிவின் கடமை.

ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற வழக்குகள் குறித்து செய்தி வெளியானாலும், நிறுவனங்கள் உண்மையானவையா, இல்லையா என்பதை உறுதிப்படுத்தாமல் பேராசை கொண்டவர்கள் பணத்தை டிபாசிட் செய்கின்றனர்.

டான்பிட் சட்டத்தின்படி, இதுபோன்ற வழக்குகளை கையாள சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகளை முடக்க, தொகையை வசூலிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.

தாமதம்

இச்சட்டம் 1997 முதல் நடைமுறையில் இருந்தாலும், மிக சிலரே பயனடைந்து தங்கள் பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். தற்போதைய தொழில்நுட்ப யுகத்துடன் பொருந்தாத காலாவதியான நடைமுறைகள் காரணமாக, சொத்துக்களை முடக்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

மனுதாரரை போலவே, பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஒரு கட்டத்தில் தங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

நிதி நிறுவனத்தின் பெயரிலோ அல்லது நிதி நிறுவனம் வசூலித்த டிபாசிட் வாயிலாக வாங்கிய சொத்துக்களையோ முடக்க இடைக்கால உத்தரவை அரசு பிறப்பிக்கலாம். சிறப்பு நீதிமன்ற அனுமதியுடன் சொத்துக்களை பொது ஏலத்தில் விற்கலாம்.

எப்.ஐ.ஆர்., பதிவு செய்வது மட்டும் உதவாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்பக் கிடைப்பதை உறுதி செய்வதே 'டான்பிட்' சட்டத்தின் நோக்கம்.

ஆனால், பொருளாதார குற்றப்பிரிவு சமர்ப்பித்த விபரங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 10 சதவீத தொகை கூட வழங்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்பக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு அரசுக்கு உள்ளது.

மனுதாரரின் புகாரின்படி அவை வழக்கு தொடர்புடைய சொத்துக்களா என்பதை கண்டறிய வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில், அச்சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement