3 ஆண்டு வக்கீலாக பணியாற்றினால்தான் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடில்லி : கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பணியாற்றுவதற்கான நீதித்துறை சேவைக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக செயல்பட்டிருக்க வேண்டும் என்ற பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உறுதி செய்துஉள்ளது.

--முன்சீப், மாஜிஸ்திரேட் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் இருந்தது.

சட்ட படிப்பு



கடந்த, 2002ல் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த நிபந்தனையை நீக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதித்துறை சேவைகளில் சேருவதற்கு, சட்ட படிப்பு முடித்தவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கின்றனர்.

போதிய அனுபவம் இல்லாததால், அவர்களால் முறையாக நீதி வழங்க முடியவில்லை என்ற புகார் எழுந்தது.

இது தொடர்பாக, பல உயர் நீதிமன்றங்களும், பழைய நடைமுறையையே தொடரலாம் என்று பரிந்துரை செய்திருந்தன.

இது தொடர்பான வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மாஷி, வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:

கடந்த 20 ஆண்டுகளில், நீதித்துறையில் சேர்ந்தவர்கள், போதிய அனுபவம் இல்லாததால் உரிய முறையில் நீதியை வழங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

உயர் நீதிமன்றங்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளன. வழக்கறிஞராக நீதிமன்றத்தில் பணியாற்றிய அனுபவம் இல்லாதவர்களால், நீதிமன்றத்தின் நடைமுறைகள் குறித்து தெரிந்துகொள்ள முடியவில்லை.

மேலும், சட்டத்தின் நுணுக்கங்களை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் தெரியவில்லை.

இதனால், 2002ம் ஆண்டுக்கு முன் இருந்த நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவதே சிறந்ததாக இருக்கும். முன்சீப், மாஜிஸ்திரேட் நீதிபதிகளுக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும்.

நிபந்தனை



இது தொடர்பாக, அந்தந்த நீதிமன்றங்களில், 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றியவர்கள் சான்று அல்லது நீதிமன்ற நீதிபதிகளின் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சட்டப்படிப்பு முடித்ததுமே, நேரடியாக நீதிபதி பதவிக்கான தேர்வை எழுத விண்ணப்பிக்க முடியாது.

ஏற்கனவே உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், அதற்கு இந்த உத்தரவு பொருந்தாது. அடுத்து நடக்கும் பணி நியமன நடைமுறைகளின்போது, இந்த நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement