ரூ.68 கோடியில் நான்கு வழிச்சாலை குளம் போல் மழைநீர் தேங்கியதால் அதிர்ச்சி

திருவாலங்காடு,:திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்டது, அரக்கோணம் ---- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை. இச்சாலை 24 கி.மீ., தூரம் உடையது. திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் இருந்து அரக்கோணம் வரையிலான 9 கி.மீ., சாலையை, முதற்கட்டமாக நான்கு வழிச்சாலையாக மாற்ற கடந்தாண்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதே ஆண்டு ஒப்புதல் கிடைத்த நிலையில், முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், 68 கோடி ரூபாயில், கடந்த மார்ச் மாதம் இறுதியில் சாலை அமைக்கப்பட்டது.

இச்சாலையில் வியாசபுரம், வீரராகவுபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு மழைநீர் தங்குதடையின்றி செல்ல 16 கல்வெட்டு பாலங்கள் மற்றும் இரு தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டன.

அதேபோல புண்டரீகபுரம், வீரராகவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை வளைவுகளின்றி நேராக அமைக்கப்பட்டது. பல்வேறு முன்னெச்சரிக்கை திட்டமிடலுடன் அமைக்கப்பட்ட சாலையில், நேற்று பெய்த கோடை மழைக்கே குளம் போல தண்ணீர் தேங்கியது.

குறிப்பாக, புண்டரீகபுரம் அருகே வியாசபுரம் சாலை மற்றும் தனியார் வேளாண் கல்லூரி அருகே உள்ள சாலை என, இரு இடங்களில் 50 மீட்டர் தூரத்திற்கு குளம்போல மழைநீர் தேங்கியது. இதனால் இருசக்கரம், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதை அறியாமல், இருவர் விபத்தில் சிக்கி லேசான காயங்களுடன் தப்பினர்.

புதிதாக அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் இப்படியொரு அவலமா என, வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதற்கு சாலை பணியை முறையாக ஆய்வு செய்யாத நெடுஞ்சாலை துறை அதிகாரிகளே காரணம் என, அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

Advertisement