அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில்ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடத்தப்படுமா
விருதுநகர்:அரசு போக்குவரத்துக் கழகங்களில் குறைதீர் கூட்டம் நடத்தப்படாததால் பிரச்னைகளை தெரிவிக்க முடியாமல் ஓய்வூதியர்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஒவ்வொரு அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் மாதத்தில் ஒரு நாள் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற அடுத்த மாதத்தில் இருந்தே அவர்களுக்கான மருத்துவ செலவு தொகை வழங்குவது நிறுத்தப்பட்டு, ஓய்வூதியத்திற்கான மருத்துவ காப்பீட்டிற்காக ரூ. 540 பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மருத்துவ காப்பீட்டிற்காக ரூ. 497 பிடித்தம் செய்யப்படுகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் தொகையை போலவே போக்குவரத்துத்துறை ஓய்வூதியர்களுக்கும் பிடித்தம் செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் மருத்துவ காப்பீடு எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது என்ற பட்டியலை வெளியிட வேண்டும் என பல முறை கேட்டும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இது போன்று ஓய்வூதியர்களுக்கான பல பிரச்னைகளில் தீர்வு காணப்படாமல் இருப்பதால் தங்களின் குறைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே ஒவ்வொரு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் மாதத்தில் ஒரு நாள் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் மேலாளர் தலைமையில் தமிழக அரசு நடத்த வேண்டும்.
அவ்வாறு நடத்தினால் ஓய்வூதியர்களின் பிரச்னைகள் நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்புள்ளது.