தீபாவளி சிறுசேமிப்பு, ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி * தலைமறைவான தம்பதி கைது
தேனி:தேனி மாவட்டம் போடியில் தீபாவளி சிறுசேமிப்பு, ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி செய்து தலைமறைவான போடி தம்பதி கோபாலகிருஷ்ணன் 45, - மனைவி சுமதி 39, ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
போடி கே.எம்.எஸ்., லே அவுட் தெரு வீரபத்திரன். இவரது மனைவி பிரியா. இவரது வீட்டின் தரைத்தளத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் -- சுமதி தம்பதி வசிக்கின்றனர். இவர்கள் 15 ஆண்டுகளாக தீபாவளி, ஏலச்சீட்டு நடத்தினர்.
2023 மார்ச்சில் வீரபத்திரன் வீட்டிற்கு சென்ற இத்தம்பதி தீபாவளி, ஏலச்சீட்டுகளில் இணையுமாறு ஆசை வார்த்தை கூறினர். அதை நம்பி வீரபத்திரன் பெயரில் ரூ.ஒரு லட்சம் முதிர்வுத் தொகை உள்ள 4 ஏலச்சீட்டுக்களிலும், மனைவி பிரியா பெயரில் ரூ.ஒரு லட்சம் முதிர்வுத்தொகை உள்ள 3 ஏலச்சீட்டுக்களிலும், வேறு இருவர் பெயரில் 10 தீபாவளி சிறுசேமிப்பு சீட்டுகளில் இணைந்தனர். மேலும் சீட்டுக்கான மாததவணையும் செலுத்தினர். முதிர்வு தொகை ரூ.8.3 லட்சம் கொண்டு சீட்டுக்களில் இத்தம்பதி சேர்ந்தனர். முதிர்வு தொகையை தம்பதி கேட்ட போது கோபாலகிருஷ்ணன் தம்பதி தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து வீரபத்திரன் அளித்த புகாரில் 2025 மார்ச் 11ல் குற்றப்பிரிவு எஸ்.ஐ., பாஸ்கரன் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் இத்தம்பதி அப்பகுதியை சேர்ந்த மகேஸ்வரி, வீரலட்சுமி, பிரியா, சதீஷ்குமார் ஆகியோரிடம் ரூ.32.4 லட்சம் பெற்று மோசடி செய்ததும் தெரிந்தது. ரூ.40 லட்சம் வரை இத்தம்பதி மோசடி செய்தனர். தலைமறைவாக இருந்த தம்பதியை குற்றப்பிரிவு எஸ்.ஐ., யாழிசைச்செல்வன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.