குப்பை கொட்ட எதிர்ப்பு! லாரியை மறித்த மக்கள் கைது

பெருமாநல்லுார்; பெருமாநல்லுார் அருகே குப்பை கொட்ட வந்த லாரியை சிறைப்பிடித்த பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் பொங்குபாளையம் ஊராட்சி, காளம் பாளையம் கிராமத்திலுள்ள பாறைக் குழியில் கொட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருந்து தெளித்தல் உள்ளிட்ட போதிய பராமரிப்பு இல்லாததால், துர்நாற்றம் வீசுகிறது. குடியிருக்க முடியவில்லை என கூறி அப்பகுதி பொது மக்கள் அவ்வப்போது, குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவிப்பர்.
அதிகாரிகள் சென்று பொதுமக்களை சமாதானம் செய்து, துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படாத வகையில் பராமரிப்பு செய்யப்படும். என உறுதி கூறி மருந்து தெளித்து, மண் போட்டு பராமரிப்பை மேற்கொண்டு தொடர்ந்து குப்பை கொட்டுவர். இந்நிலையில், காளம்பாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள், நேற்று காலை குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, குப்பை லாரியை மறித்து ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆகியோர் மக்களிடம் பேச்சு நடத்தினர். அதில், 'பாறைக்குழியில் மண் போட்டு துர்நாற்றம் வீசாத வகையில் பராமரிப்பு செய்யப்படும்.
தினமும் மருந்து தெளிக்கப்படும்,' என்று உறுதி கூறினர். இதனையேற்று கொள்ளாத மக்கள் மாநகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி இங்கு குப்பை கொட்ட கூடாது, என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து, மேயர் மற்றும் துணை மேயர் வெளியேறியதும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 14 பேரை பெருமாநல்லுார் போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.