நெதர்லாந்து நிலைப்பாட்டுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி

தி ஹேக் : பயங்கரவாதத்துக்கு எதிரான நெதர்லாந்து நாட்டின் உறுதியான நிலைப்பாட்டுக்கு நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலில் நெதர்லாந்து சென்ற ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் டிக் ஸ்கூப்பை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அதன்பின் அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமர் டிக் ஸ்கூப்பை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. பிரதமர் மோடியின் வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்தேன். பயங்கரவாதத்துக்கு எதிரான நெதர்லாந்தின் உறுதியான நிலைப்பாட்டுக்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
இந்தியா- - நெதர்லாந்து நல்லுறவை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதற்கான அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டுகிறேன். இந்த இலக்குகளை அடைய எங்கள் தரப்பும் கடுமையாக உழைக்கும் என்று உறுதியளித்துள்ளேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப் வெளியிட்டுள்ள அறிக்கை:
பஹல்காமில் கடந்த மாதம் நடந்த கொடூர தாக்குதலுக்குப் பின் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவை தெரிவித்தேன்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை தீவிரம் அடையாதது அனைத்து தரப்பினருக்கும் நல்லது.
இந்தியா - நெதர்லாந்து இடையே வர்த்தகம், புதுமையான தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் நீண்டகால ஒத்துழைப்பு குறித்து அமைச்சர் ஜெய்சங்கருடன் விரிவாக விவாதித்தேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பின் நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் மற்றும் ராணுவ அமைச்சர் ரூபன் பிரெக்கல்மன்ஸ் ஆகியோரை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
வேகமாக மாறிவரும் இந்த உலகில், இந்தியா - நெதர்லாந்து இருதரப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான சிறந்த வாய்ப்புகள் இருப்பதை காண்கிறேன். பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் நம் நீண்டகால உறவை வலுப்படுத்த விரும்புகிறேன்.
-காஸ்பர் வெல்ட்காம்ப்
நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர்


மேலும்
-
தொடர் வெடிகுண்டு மிரட்டல் மாஜி அமைச்சர் கண்டனம்
-
புகார் பெட்டி புதுச்சேரி
-
ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
-
தேனியில் விபத்திற்கு காத்திருக்கும் கழிவு நீர் சாக்கடை பணி எச்சரிக்கை அறிவிப்பு இல்லாத அவலம்
-
ஹோலி பிளவர்ஸ் பள்ளி பொது தேர்வுகளில் சாதனை
-
சரஸ்வதி எக்ஸல் பள்ளி 10 ம் வகுப்பு தேர்வில் சாதனை