ஓராண்டு சிறையில் இருந்தால்தான் ஜாமினா... யார் சொன்னது? சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி: மதுபான விற்பனையில், 2,161 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த வழக்கில், சத்தீஸ்கரை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரின் சகோதரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் அளித்தது. அப்போது, 'பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கைதானவர், சிறையில் ஓராண்டு இருக்க வேண்டியது கட்டாயம் என சட்டம் எதுவும் இல்லை' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பிரமுகரும், ராய்ப்பூர் மேயருமான அய்ஜாஸ் தேபாரின் சகோதரர் அன்வர் தேபார். தொழிலதிபரான அன்வர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, மதுபான விற்பனையில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக அவர் மீது வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதன் அடிப்படையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
குற்றப்பத்திரிகை
இந்த வழக்கில் 2024 ஜூலை 4ல் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், அன்வர் தேபார், 2,161 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்ததாக குற்றஞ்சாட்டி இருந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்வர் தேபார், ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வழக்கில் ஜாமின் பெற, சம்பந்தப்பட்ட குற்றவாளி ஓராண்டாவது சிறையில் இருந்திருக்க வேண்டும் என்ற அளவுகோலை உச்ச நீதிமன்றம் பின்பற்றுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட அன்வர் தேபார், ஒன்பது மாதங்கள் மட்டுமே சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமின் வழங்க கூடாது' என, வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கின் விசாரணை இப்போதைக்கு முடிவடைவதாக தெரியவில்லை. அதுவரை இவரை சிறையில் வைத்திருக்க முடியாது.
அவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்படுமானால், அதிகபட்ச தண்டனையே ஏழு ஆண்டுகள் தான். ஏற்கனவே அவர், ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்து விட்டார்.
இந்த வழக்கில், 450க்கும் மேற்பட்ட சாட்சிகள் உள்ளனர். அவர்களை விசாரித்து முடிக்கும் வரை, இவரை சிறையில் வைத்திருப்பது நியாயம் இல்லை. எனவே, இவரை ஜாமினில் விடுவதுதான் சரியானதாக இருக்கும்.
சட்டம் எதுவுமில்லை
மேலும், பணமோசடி வழக்கில் கைதானவர் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என சட்டம் எதுவும் சொல்லவில்லை.
சிறையில் இருக்கும் அன்வர் தேபார் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அவருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய போதும் உச்ச நீதிமன்றம், இதே போன்ற உத்தரவை பிறப்பித்தது.
நீதிபதிகள் வேதனைமோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 65 வயதான நபருக்கு, 50 சதவீத கண் பார்வை குறைபாடு ஏற்பட்டது. அவர் ஜாமின் கோரி விசாரணை நீதிமன்றத்தில் முறையிட்டார். மனு நிராகரிக்கப்பட்டது.இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை நாடினார். நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு விசாரித்தது. 'மனுதாரரின் வயது 65; அவருக்கு 50 சதவீத பார்வை குறைபாடு உள்ளது. இதுபோன்ற வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்டவர் ஜாமின் பெற உச்ச நீதிமன்றம் வரை பயணிக்க வேண்டியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என நீதிபதிகள் தெரிவித்தனர்.'குற்றவாளியை ஒரு வாரத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சரியான நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகி வழக்கை விரைவாக முடிக்க ஒத்துழைப்பு தருவதை உறுதி செய்த பின் ஜாமின் வழங்கலாம்' என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர்.


மேலும்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை
-
மாநில அந்தஸ்து வேண்டி கையெழுத்து இயக்கம்
-
குருகுலம் பள்ளி சாதனை