மஹாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்; அமைச்சராக சக்கன் புஜ்பல் பதவியேற்பு

மும்பை, : ஐந்து மாதங்களுக்கு பின், மஹாராஷ்டிர அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. தேசியவாத காங்., மூத்த தலைவர் சக்கன் புஜ்பல், 77, புதிய அமைச்சராக பதவியேற்றார்.
மஹாராஷ்டிராவில், 2024 நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி அபார வெற்றி பெற்றது.
அதிக தொகுதிகளில் பா.ஜ., வென்றதை அடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார்.
ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, மஹாராஷ்டிர அமைச்சரவையும் பதவியேற்றது.
முந்தைய கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த தேசியவாத காங்., மூத்த தலைவர் சக்கன் புஜ்பலுக்கு, புதிய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. இது, ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஐந்து மாதங்களுக்கு பின் மஹாராஷ்டிரா அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. மும்பையில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில், தேசியவாத காங்., மூத்த தலைவர் சக்கன் புஜ்பல், அமைச்சராக பதவியேற்றார்.
அவருக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் புஜ்பலின் துறை குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
மஹாராஷ்டிர அமைச்சரவையில் பா.ஜ.,வைச் சேர்ந்த 19 பேர், சிவசேனாவைச் சேர்ந்த 11 பேர் மற்றும் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த ஒன்பது பேர் என, மொத்தம் 39 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
மேலும்
-
தொடர் வெடிகுண்டு மிரட்டல் மாஜி அமைச்சர் கண்டனம்
-
புகார் பெட்டி புதுச்சேரி
-
ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
-
தேனியில் விபத்திற்கு காத்திருக்கும் கழிவு நீர் சாக்கடை பணி எச்சரிக்கை அறிவிப்பு இல்லாத அவலம்
-
ஹோலி பிளவர்ஸ் பள்ளி பொது தேர்வுகளில் சாதனை
-
சரஸ்வதி எக்ஸல் பள்ளி 10 ம் வகுப்பு தேர்வில் சாதனை