கிள்ளுகுடியில் கண்மாய் மராமத்து பணி நிறுத்தம்

மானாமதுரை : மானாமதுரை அருகே கிள்ளுகுடி கிராம கண்மாய் மராமத்து பணியை நிறுத்திய கிராம மக்கள் அப்பகுதி விவசாயிகளையும் இணைத்து பணி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட கிள்ளுகுடி கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் உள்ளது.

இக்கண்மாயை நம்பி 400 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. மத்திய,மாநில அரசுகளின் நிதி ரூ.65 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை சார்பில் மராமத்து பணி நடைபெற உள்ளது.

கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கிள்ளுகுடி கிராம மக்கள் வழக்கமாக கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அவர்களே அரசுக்கு உரிய தொகையை செலுத்தி மரங்களை வெட்டி விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் அடிப்படை பணிகளை செய்து கொள்வது வழக்கம். தற்போது வருவாய்துறையினர் டெண்டர் விட்டு கருவேல மரங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை நிறுத்தினர்.

கிள்ளுகுடி கிராம மக்கள் கூறியதாவது: ஒவ்வொரு வருடமும் கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களுக்கான தொகையை கிராம மக்களே அரசுக்கு செலுத்தி விட்டு விறகுகளை வெட்டி விற்பனை செய்து, ஊராட்சியில் நிதி ஆதாரம் இல்லாத நிலையில் ரோடு, குடிநீர் உள்ளிட்ட அத்யாவசிய பணிகளை மேற்கொள்வோம், ஆனால் இந்த வருடம் அதிகாரிகள் எங்களுக்கு தெரியாமல் மரங்களை வெட்டுவதற்கு டெண்டர் விட்ட நிலையில் பொதுப்பணித்துறை யினர் பணிகளை ஆரம்பிக்க வந்த போது தடுத்து நிறுத்தியதாகவும், இப்பணிகளில் கிராம மக்களையும் இணைத்து மராமத்து செய்ய வேண்டும் என்றனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது இக்கண்மாயில் 2 மடைகளை மட்டும் மராமத்து செய்ய உள்ள நிலையில் பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில் இன்று மீண்டும் பணிகளை துவக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement