கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை

காரகாஸ்: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவிலிருந்து வரும் விமானங்களை, அதன் அண்டை நாடான வெனிசுலா தடை செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோ, 62, கடந்த 2013 முதல் பதவியில் இருக்கிறார். அண்டை நாடான கொலம்பியாவில், அவருக்கு நெருக்கமான, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கஸ்டாவோ பெட்ரோ, 2022 முதல் அதிபராக உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு நிலவும் நிலையில், கொலம்பியாவிலிருந்து வரும் விமானங்களை உடனடியாக தடை செய்து, வெனிசுலா அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கொலம்பியா நாட்டின் விமானங்களில் வந்த 37 பேரையும், வெனிசுலா அரசு கைது செய்துள்ளது. அவர்களில் 21 பேர் வெனிசுலா, பிறர் கொலம்பியா, மெக்சிகோ மற்றும் உக்ரைன் நாடுகளின் குடிமக்கள்.

வெனிசுலாவில், வரும் 25ல் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும், வெளிநாட்டு துாதரகங்களில் வெடிகுண்டுகள் வைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் கைது செய்யப்பட்டுள்ள 37 பேரும், அல்பேனியா நாட்டின் குற்ற அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும், தேர்தலை சீர்குலைக்க இவர்கள் சதித்திட்டம் தீட்டியிருந்ததாகவும், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement