கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்

கத்திரி வெயில் மே 4ல் துவங்கி, வரும், 28ல் நிறைவடைகிறது. அந்த நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நீர்நிலைகள், அருவி, ஆறுகள் வறண்டு கிடக்கும்.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சியால், சில நாட்களாக கர்நாடகா மாநிலம், பெங்களூரில் கனமழை பெய்து வருகிறது.
தமிழக - கர்நாடக எல்லையிலுள்ள மேட்டூர் நீர்ப்பிடிப்பு பகுதியில் கோடை மழை தீவிரமடைந்தது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 6,233 கனஅடியாகவும், நேற்று, 9,639 கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீருக்கு, 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர் திறப்பை விட வரத்து கூடுதலாக இருந்ததால், நேற்று முன்தினம், 108.82 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று 109.33 அடியாக அதிகரித்தது.
நேற்று அணை நீர் இருப்பு, 77.46 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நிரம்ப இன்னமும், 16 டி.எம்.சி., நீர் தேவை. நீர்வரத்து, திறப்பில் இதே நிலை நீடித்தால் அணை, 23 முதல், 25 நாட்களில் நிரம்ப வாய்ப்பு உள்ளது.
வெள்ள எச்சரிக்கை
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் பெய்து வரும் கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து, 1,101 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து, 1,361 கனஅடி நீர் திறப்பு மற்றும் தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில், ஒரு வாரமாக பெய்யும் கனமழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,275 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று அதிகாலை, 3,208 கன அடியாக அதிகரித்தது.
அணை நீர்மட்டம் நேற்று, 51 அடியை எட்டியதால், அணை பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில், 2,193 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 4,208 கனஅடியாக அதிகரித்ததால், அந்த தண்ணீர் முழுதும், அணை பிரதான ஷட்டர் மற்றும், 3 சிறிய மதகில் திறக்கப்பட்டது.
இதனால், தென்பெண்ணை ஆற்றின் இரு கரைகளை தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து, அணையின் கீழ்ப்பகுதி தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்கிறது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு, வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் குழு -
மேலும்
-
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் ஜூன் 5ல் நிறைவுபெறும்!
-
கர்நாடகாவில் கன்னடம் பேச மறுத்து வாடிக்கையாளருடன் வாக்குவாதம் : எஸ்பிஐ அதிகாரி இடமாற்றம்
-
கடும் வெயிலால் ஏ.டி.எம். மையத்தில் தஞ்சம் அடைந்த குடும்பம்: வீடியோ வைரல்
-
மாநில உரிமை பற்றி நீங்கள் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்! : முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்
-
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தீவிர விவாதம்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
-
பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு; அண்ணாமலை கண்டனம்!