த.வெ.க.,  தனித்து போட்டியிடுவது நல்லது விஜய்க்கு  எச்.ராஜா 'அட்வைஸ்'

16

மதுரை : ''தேர்தலில் த.வெ.க., தனித்து போட்டியிடுவது நல்லது. தனித்து அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவது நடிகர் விஜய் விருப்பம்'' என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மதுரையில் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: டாஸ்மாக் ஊழல் குறித்து அமலாக்கத்துறையின் அறிக்கை வந்ததும் தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு பதட்டம் ஏற்பட்டது.

அமலாக்கத்துறை சோதனை நடத்திய விவகாரத்தில் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக உள்ளனர். எங்கே ஓடி ஒளிந்தாலும் உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இவ்விவகாரத்தில் தி.மு.க.,வின் ஒரு குடும்பம் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதில் நிச்சயமாக தமிழகத்தின் 'மணிஷ் சிசோடியா' பிடிபடுவார். இதிலிருந்து திசை திருப்ப தமிழுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகக்கூறி ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மகேஷ் நாடகமாடுகின்றனர்.

'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் பொறுப்பற்ற முறையில் தேசப்பற்று இல்லாமல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். அது கண்டிக்கத்தக்கது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தர் மலையை சிலர் சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்கின்றனர். பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் ஜூன் 22 ல் நடக்கிறது.

2026 ல் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக கனவு காண தி.மு.க.,விற்கு உரிமை உண்டு. அ.தி.மு.க.,வுடன் பா.ஜ.,கூட்டணியை அறிவித்ததும் தி.மு.க., எம்.பி., கனிமொழி கதறினார். ஏன் அலற வேண்டும். முன்பு காங்., கூட்டணியிலிருந்து வெளியே வந்தபோது, 'கூடா நட்பு கேடாய் முடியும்,' எனக்கூறியது தி.மு.க., தற்போது ஏன் அது காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. ஏற்கனவே தனித்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட், வி.சி.க., தற்போது தி.மு.க., கூட்டணியில் தொடர்வதில் வெட்கமாக இல்லையா.

தேர்தலில் த.வெ.க., தனித்து போட்டியிடுவது நல்லது. தனித்து அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவது விஜய் விருப்பம். இவ்வாறு கூறினார்.

Advertisement